“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
பாயின்ட்ஸ் டேபிளுக்கு அடியில், இலவம் பஞ்சு தலையணைப் போட்டு குப்புற படுத்திருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் திடீரென அலறியடித்து எழுந்து, மற்றவர்களை புரட்டி போட்டு சங்கை கடிக்கிறது. `இவிய்ங்கள யார்றா எழுப்பிவிட்டது' என அனைத்து அணிகளுமே அதிர்ந்துபோய் கிடக்கின்றன.
சஞ்சு சாம்சன், சீசனின் ஆரம்பத்தில் மடார் மடாரென பந்துகளை அடித்து நம்பிக்கை கொடுப்பார். கடைசியில் பளார் பளாரென நம்பியவர்களை அடித்து அதிர்ச்சி கொடுப்பார். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே, சஞ்சு சாம்சனைப் போல் மாறிவிட்டது. இப்படி, நொந்து போயிருக்கும் ராயல்ஸும், வெந்து கொண்டிருக்கும் சன்ரைசர்ஸும் மோதினால் என்ன ஆகும்?
ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சாம்சன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதல்முறையாக, ஜோ ரூட் அணிக்குள் வந்திருந்தார். ப்ரூக்கிற்கு பதில் பிளிப்ஸை உள்ளே கொண்டு வந்திருந்தது சன்ரைசர்ஸ். ஜெய்ஸ்வால் - பட்லர் ஜோடி ராயல்ஸின் இன்னிங்ஸை தொடங்க, முதல் ஓவரை வீசவந்தார் புவி. முதல் பந்தே, பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். 4வது பந்தை ஃபைன் லெக்கில் தூக்கிவிட, அது அறிமுக வீரர் விவ்ராந்த் சர்மாவின் கால்களுக்கு இடையே புகுந்து பவுண்டரியில் விழுந்தது. கொஞ்சம் முயன்றிருந்தால், கேட்சே பிடித்திருக்கலாம். ப்ச்ச்...
யான்சனின் 2வது ஓவரில், லெக் பைஸில் ஒரு பவுண்டரி. அடுத்து பட்லரின் பேட்டிலிருந்து ஒரு பவுண்டரி. ஜெய்ஸ்வால் பேட்டிலிருந்து ஒரு சிக்ஸர். 3வது ஓவரை வீசினார் நடராஜன். பட்லர் ஒரு பவுண்டரி விளாசினார். புவனேஷ்வர் வீசிய 4வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். யான்சனின் 5வது ஓவரில், ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். அதே ஓவரின் கடைசிப்பந்தில், ஷார்ட் தேர்டில் நின்றுகொண்டிருந்த நடராஜனுக்கு எளிய கேட்ச் ஒன்றை கொடுத்துவிட்டு வெளியேறினார் ஜெய்ஸ்வால். நடராஜனின் அடுத்த ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கேப்டன் சாம்சன். பவர்ப்ளேயின் முடிவில் 61/1 என நன்றாகவே தொடங்கியிருந்தது ராயல்ஸ்.
மயங்க் மார்கண்டேவின் 7வது ஓவரில், சாம்சன் ஒரு பவுண்டரி விளாசினார். அபிஷேக் சர்மாவின் சுழற்பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 9வது ஓவரை வீசவந்த மார்கண்டேவை, தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து வரவேற்றார் சாம்சன். பட்லர் கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரை அடித்து கணக்கை முடித்தார். அபிஷேக் சர்மாவின் 10வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என கடாசினார் பட்லர். 10 ஓவர் முடிவில் 107/1 என கெத்தாக ஆடினர் ராயல்ஸ் அணியினர்.
அறிமுக வீரர் விவ்ரந்த் சர்மா 11வது ஓவரை வீசவந்தார், பட்லருக்கு ஒரு பவுண்டரியுடன் சேர்த்து 8 ரன்கள் கிடைத்தது. யான்சனின் 12வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த பட்லர், தனது அரைசதத்தையும் கடந்தார். விவ்ரந்தின் 13வது ஓவரில், பட்லரிடமிருந்து ஒரு சிக்ஸர் பறந்தது. மீண்டும் வந்த மார்கண்டேவை மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார் சாம்சன். யான்சனின் 15வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் பட்லர். 15 ஓவர் முடிவில் 154/1 என விக்கெட்டையும், ரன் ரேட்டையும் விட்டுக்கொடுக்காமல் ஆடியது ராயல்ஸ்.
மார்கண்டேவின் 16வது ஓவரில், பட்லர் ஒரு சிக்ஸரும், சாம்சன் ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டனர். புவனேஷ்வரின் 17வது ஓவரை இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் பட்லர். அதே ஓவரில், இன்னொரு பவுண்டரியும் அவருக்கு கிடைத்தது. நடராஜனின் 18வது ஓவரில், கேப்டன் சாம்சன் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அந்த ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. புவியின் 19வது ஓவரில், பட்லர் அவுட்! 59 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து தனது சதத்தை நழுவவிட்டார். கடைசி ஓவரில், சாம்சனுக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், இன்னொரு பவுண்டரி என வாரி வழங்க, 214/2 என சிறப்பாக ஆட்டத்தை முடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நடராஜனுக்கு பதில் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் அன்மோல்ப்ரீத் சிங். அபிஷேக் சர்மாவும், அன்மோலும் சன்ரைசர்ஸின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் சந்தீப் சர்மா. முதல் ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. `ஏமிரா இதி' என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் கடுப்பானார்கள். குல்திப் யாதவின் 2வது ஓவரில், முதல் சிக்ஸரை அடித்தார் அன்மோல். சந்தீப்பின் 3வது ஓவரில், அபிஷேக் ஒரு பவுண்டரியும், அன்மோல் ஒரு பவுண்டரியும் அடித்தனர். ரவி அஸ்வின் 4வது ஓவரை வீசவந்தார். அன்மோலிடமிருந்து ஒரு பவுண்டரி. சந்தீப்பின் 5வது ஓவரில், அன்மோல் ஒரு பவுண்டரியும், அபிஷேக் இரு பவுண்டரிகளும் அடித்தனர். சஹலின் 6வது ஓவரில் ஒரு பவுண்டரி தட்டிய அன்மோல்ப்ரீத், அவுட்டும் ஆனார். 6 ஓவர் முடிவில் 52/1 என நன்றாகவே தொடங்கியிருந்தது சன்ரைசர்ஸ்.
ரவி அஸ்வினின் 7வது ஓவரில், 6 ரன்கள் மட்டுமே. சஹலின் 8வது ஓவரில், அபிஷேக் ஒரு பவுண்டரி விளாசினார். குல்திப் யாதவின் 9வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. வசவு வார்த்தைகளால் த்ரிப்பாட்டியை குளிப்பாடிட்னர் சன்ரைசர்ஸ் ரசிகர்கள். வெறியான த்ரிப்பாட்டி, முருகன் அஸ்வின் பந்தில் ஒரு சிக்ஸரை விளாசினார். அதே ஓவரில், அபிஷேக்கும் ஒரு பவுண்டரி அடித்தார். 10 ஓவர் முடிவில் 87/1 என விரட்டி ஓடி வராமல், நடந்து வந்தது சன்ரைசர்ஸ் அணி.
இப்போது ரவி அஸ்வின். த்ரிப்பாட்டி ஒரு பவுண்டரி அடித்தார். இப்போது முருகன் அஸ்வின். அபிஷேக் ஒரு சிக்ஸர் அடித்தார். இப்போது ரவி அஸ்வின். அபிஷேக் ஒரு சிக்ஸர் அடித்தார். ஆனால், அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆனார். 34 பந்துகளில் 55 ரன்கள் எனும் அட்டகாசமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ரவி அஸ்வினுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் மெக்காய். முருகன் அஸ்வினின் 14வது ஓவரை சிக்ஸருடன் துவங்கினார் க்ளாஸன். த்ரிப்பாட்டியும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார். இன்னும் 36 பந்துகளில் 79 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்கள்!
மீண்டும் வந்தார் குல்திப். க்ளாஸன் ஒரு பவுண்டரி அடிக்க, 10 ரன்கள் கிடைத்தது. 16வது ஓவரை வீச்னார் சஹல். ஓவரின் 2வது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார் க்ளாஸன். 4வது பந்தில் ஒரு பவுண்டரி. 5வது பந்தில் விக்கெட்! 75 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கிப்போட்ட பந்தை, பட்லரின் கையில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் க்ளாஸன். மெக்காயின் 17வது ஓவரில், த்ரிப்பாதி கொடுத்த கேட்சை தவறவிட்டார் சாம்சன். முன்பு, ஒரு ரன் அவுட்டையும் மிஸ் செய்திருந்தார். பேட்டிங்கில் கலக்கினால், கீப்பிங்கில் விட்டுவிடுகிறார் சஞ்சு! கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி த்ரிப்பாட்டி ஒரு சிக்ஸரை விளாச, மார்க்ரம் ஒரு பவுண்டரி அடித்தார்.
சஹலின் 18வது ஓவரில், த்ரிப்பாட்டி காலி. எல்லை கோட்டின் அருகே நின்று அற்புதமான கேட்சைப் பிடித்தார் ஜெய்ஸ்வால். 29 பந்துகளில் 47 ரன்கள் என மீண்டும் ஃபார்முக்கு வந்திருந்த த்ரிப்பாட்டியை, சன்ரைசர்ஸ் ரசிகர்கள் அன்பில் குளிப்பாட்டினர். அதே ஓவரின் 5வது பந்தில், கேப்டன் மார்க்ரம் அவுட். எல்.பி.டபுள்யூ முறையில் ஆளைத் தூக்கினார். மேல்முறையீட்டுக்குச் சென்றும் பயனில்லை. இந்த ஓவரில் 2 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி, 3 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் சஹல். இன்னும் 12 பந்துகளில் 41 ரன்கள் தேவை!
19வது ஓவரை வீசவந்தார் குல்திப். முதல் பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் பிளிப்ஸ். இரண்டாவது பந்தும் சிக்ஸருக்கு பறந்துபோய் விழுந்தது. மூன்றாவது பந்து, மீண்டும் சிக்ஸ்! `வேணாம் பிளிப்ஸே' என ராயல்ஸ் ரசிகர்கள் கண்ணீர் வடித்தார்கள். மொத்த அணியும் வந்து, குல்திப்புக்கு அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றது. அறிவுரையும் கொஞ்சம் வேலை செய்தது. ஆமாம், இம்முறை சிக்ஸர் அல்ல, இரண்டு ரன்கள் குறைத்து பவுண்டரிதான் கொடுத்தார். அடுத்த பந்தில், பிளிப்ஸ் கொடுத்த கஷ்டமான கேட்ச் வாய்ப்பை பாய்ந்து பிடித்தார் ஹெட்மயர். இன்னும் 6 பந்துகளில் 17 ரன்கள்தான் தேவை என ஆட்டத்தை ஒரே ஓவரில் மாற்றிவிட்டு கிளம்பினார் பிளிப்ஸ்.
கடைசி ஓவரை வீசினார் சந்தீப். முதல் பந்து, சமாத் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டார் மெக்காய். `உன்னை இம்பாக்ட் ப்ளேயரா கூட்டிட்டு வந்ததுக்கு, உன்னால என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணிட்ட' என நினைத்துகொண்டார் சாம்சன். அந்த பந்தில் 2 ரன்கள் ஓடிவிட்டனர் சன்ரைசர்கள். இரண்டாவது பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சமாத். 3வது பந்து மீண்டும் 2 ரன்கள். 4வது பந்து ஒரு சிங்கிள். இன்னும் 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை. 5வது பந்தில் யான்சன் ஒரு சிங்கிளைத் தட்டினார்.
கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால், சூப்பர் ஒவர். சிக்ஸர் அடித்தார் சூப்பர் வெற்றி. இரண்டும் இல்லையேல், ராயல்ஸ் வெற்றி எனும் நிலையில், கடைசி பந்தை வீசினார் சந்தீப். சிக்ஸரும் இல்லை, பவுண்டரியும் இல்லை. ஃபீல்டரின் கையில் நேராக போய் விழுந்தது. சந்தீப் சர்மா, ஒரு கையை மேலே தூக்கி வெற்றியைக் கொண்டாடினார். அங்கேதான் ஒரு ட்விஸ்ட்! அம்பயர் ஒரு கையை பக்கவாட்டில் தூக்கினார். நோ பால்! ஃப்ரீ ஹிட்! ராஜஸ்தான் ரசிகர்கள் உலகமே இருண்டது போல் உணர்ந்தார்கள். மாற்றாக வீசபட்ட கடைசிப்பந்தில், சந்தீப்பின் தலைக்கு மேலேயே ஒரு சிக்ஸரைத் தூக்கி அடித்தார் சமாத்! முடின்ச்... 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத். 7 பந்துகளில் 25 பந்துகளை அடித்து, ஆட்டத்தை திருப்பிய பிளிப்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `உன் குத்தமா, என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல' எனும் பாடலை ராயல்ஸ் அணிக்கு டெடிகேட் செய்தார் கேப்டன் சாம்சன்.