ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நீங்கள் காதலிக்கலாம் அல்லது தவிர்க்கலாம். ஆனால் வெறுக்க மட்டும் முடியாது. முதல் ஐ.பி.எல்லில் வாட்சன், ஸ்மித், மோர்னே மார்கல், சோஹைல் தன்வீர் என வெளிநாட்டு பிளேயர்களும் சரி, கைஃப், யூசுப் பதான், அஸ்னோத்கர் என உள்ளூர் வீரர்களும் சரி... ஆர்ப்பாட்டமே இல்லாத லைன் அப் அது. 'என்ன இது இப்படி ஒரு டீம்' என லிஸ்ட்டை பார்த்து வளையாத புருவங்களே கிடையாது. ஆனால் அத்தனை பேரையும் அரவணைத்து யாரும் எதிர்பார்த்திடாத ஒரு மேஜிக்கை நிகழ்த்திக் காட்டினார் 'லெஜெண்ட்' வார்னே. இறுதிப்போட்டியில் ஒருபக்கம் தோனி, ஹேடன், மைக் ஹஸ்ஸி, முரளிதரன் என அந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட் உலகமே கொண்டாடிக்கொண்டிருந்த சென்னைதான் எதிரே. அப்பேர்ப்பட்ட அணியை எதிர்த்து ஆடும்போது பொதுவாகவே மனசாட்சி சென்னை சார்பிலேயே குரல் கொடுக்கும். ஒருகட்டத்தில் 'எல்லாம் முடிந்துவிட்டது' என நினைத்த நேரத்தில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி கோப்பையை வென்றது ராஜஸ்தான். அந்த போராட்டக்குணம் வார்னே மீதான மதிப்பை மட்டுமல்ல, மொத்த அணி மீதான மதிப்பையும் உலக அரங்கில் உச்சத்திற்கு ஏற்றியது. நடுவே கொஞ்சம் தடுமாறினாலும் சமீப காலங்களில் மீண்டும் அந்த அணி மீது மதிப்பு கூடியிருக்கிறது. காரணம் 'சஞ்சு சாம்சன்'.
கேப்டனாய், கீப்பராய், பேட்ஸ்மேனாய் தன் பெஸ்ட்டைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் சஞ்சு. அந்த உழைப்பை மூலதனமாக வைத்து 11 சீசன்களுக்கு பிறகு மீண்டும் கடந்த முறை இறுதிப்போட்டியில் நுழைந்து நூலிழையில் கோப்பையைத் தவறவிட்டது ராஜஸ்தான். விட்டதைப் பிடிக்க உத்வேகத்தோடு களமிறங்கும் அந்த அணியிடம் அதற்கான எரிபொருள் இருக்கிறதா?
சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு என தகவல்கள் வெளியானவுடனேயே 'ரொம்ப சீக்கிரமோ' எனக் எதிர்க்குரல்களும் கேட்டன. ஆனால் விமர்சனங்களுக்கு தன் துல்லியமான பீல்டிங் செட்டப் வழியே, புத்திசாலித்தனமான பவுலிங் தேர்வுகள் வழியே பதில் சொன்னார் சாம்சன். டி20, ரஞ்சி என எங்கும் சஞ்சு ஆட்டம்தான். இந்த ஓராண்டில் சர்வதேச டி20யில் நான்கு போட்டிகள் மட்டுமே ஆடியிருக்கிறார் என்பது மட்டுமே ஒரு சின்ன குறை. ஆனால் அதற்குக் காரணமும் அவரல்ல. இந்திய அணியில் நான்காவது பொசிஷனில் நிலவும் வெற்றிடத்தை இந்த சீசன் முடிந்தபின் சாம்சன் நிரப்புவார் என நம்புவோம்.
பட்லர் - போன தலைமுறையில், 'இவர் ஆடினா டெஸ்ட் மேட்ச்சைக்கூட ஒரு பால் விடாம பார்க்கலாம்' என சொல்லும்வகையில் சில பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். இந்தத் தலைமுறையில் அது ஜாஸ் பட்லர். கடந்த சீசனின் ஆரஞ்சு தொப்பி ஓனர். இவர் அடித்த வேகத்தில் ஆயிரம் ரன்களை ஒரே சீசனில் கடந்துவிடுவார் என்றுதான் தோன்றியது. மிடில் ஆர்டரில் ஆடிக்கொண்டிருந்தவர் ஓபனிங் இறங்கத் தொடங்கியதிலிருந்து ருத்ர தாண்டவமாடுகிறார். 54 போட்டிகளில் 14 அரைசதங்கள், 5 சதங்கள் உள்பட 2271 ரன்கள். இந்த சீசனிலும் அவரின் வாணவேடிக்கைக்கு குறைவிருக்காது.
பேட்டிங் லைன் அப் - 'நாங்க அஞ்சு பேரு. எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது' ரகத்தில்தான் இருக்கிறது ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை. ஓபனர் ஜெய்ஸ்வால் சிக்கிய இடைவெளிகளில் எல்லாம் ரன் சேகரிப்பதில் கில்லாடி. இன்னொரு ஓபனர் பட்லர். ஒன் டவுனில் இறங்கும் படிக்கல் அணிக்குத் தேவையான ஸ்திரத்தன்மையை மிடில் ஓவர்களில் கொடுப்பார். நான்காவது சாம்சன். பினிஷர் ரோல் ஹெய்ட்மயருக்கு. மனிதரிடம் பந்து சிக்கினால் பக்கத்து ஊர் வரை பறக்கும். இந்த லைன் அப் 200+ ரன்களையும் அசால்ட்டாய் சேஸ் செய்யக்கூடியது.
பவுலிங் லைன் அப் - இருக்கும் அணிகளிலேயே சுழலில் ஸ்ட்ராங் ராஜஸ்தான் தான். அஸ்வின், சஹல் என இரண்டு உலகத்தர ஸ்பின்னர்கள். மொத்தமாய் மிடில் ஓவர்களை குத்தகைக்கு எடுத்துக்கொள்வார்கள். பவர்ப்ளேவுக்கு இருக்கவே இருக்கிறார் போல்ட். ஸ்டம்ப்பைத் தெறிக்க விடுவார். ஜேசன் ஹோல்டரின் வருகை டெத் ஓவர்களுக்கு கைகொடுக்கும். காயம் காரணமாக வெளியேறிய பிரஷித் கிருஷ்ணாவை அணி நிச்சயம் மிஸ் செய்யும். ஆனால் அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட்ட சந்தீப் சர்மாவும் சாதாரணமான ஆளில்லை. விராட் கோலிக்குத் தெரியும். 50+ பிளஸ் போட்டிகள் ஆடிய வேகப்பந்து வீச்சாளர்களின் எகானமியை எடுத்துப்பார்த்தால் டாப் டென்னில் எப்போதும் இருப்பார். சைனி,ஆடம் ஸாம்பா, முருகன் அஸ்வின், மெக்காய், ஆசிஃப் என பேக்கப் பவுலர்களுக்கும் குறைவில்லை.
இம்பேக்ட் பிளேயர் விதிமுறை - இந்த விதியின் மூலம் அதிகம் அறுவடை செய்யப்போவது ராஜஸ்தான் தான். முதல் ஐந்து இடங்களில் ஆடுபவர்கள் சுத்தமாய் பந்தைத் தொடமாட்டார்கள். ஆறாவதாய் ரியான் பராக்கும் போன சீசன் வரை பெரிதாய் பவுலிங் போடமாட்டார். மீதியிருப்பவர்களை வைத்து சரியாய் நான்கு ஓவர்கள் வீசி கோட்டாவை முடிப்பது பெரும் சவாலாய் இருந்தது. இந்த முறை முக்கியமாய் சேஸிங்கில் இம்பேக்ட் பிளேயராய் பவுலரை பிட்ச்சுக்கு ஏற்றவாறு உள்ளிழுத்து சமாளிப்பார்கள்.
பேட்டிங், பவுலிங் இரண்டுமே செம ஸ்ட்ராங் என்றாலும் இவை இரண்டையும் இணைக்கும் புள்ளி மட்டுமே கொஞ்சம் பலவீனமாய் இருக்கிறது. டி20களில் 6,7 ஆகிய இடங்கள் மிக முக்கியம். அந்த இடங்களில் இறங்குபவர்கள் ஆல்ரவுண்டர்களாய் பவர்ஹிட்டர்களாய் இருக்கவேண்டியது அவசியம். ரியான் பராக்கிடம் ஃபார்ம் இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் பிரஷரை எப்படித் தாங்குவார் என்பது கேள்விக்குறியே. ஏழாவது இடத்தில் இறங்கப்போகும் ஹோல்டரின் சமீபத்திய ஃபார்மும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. இந்த சின்ன ஓட்டையை செப்பனிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அணி நிர்வாகம்.
ரியான் பராக் - போன பத்தியில் அவர் பெயரை பார்த்துவிட்டு இங்கேயும் பார்ப்பது முரணாய் தோன்றலாம். ரியாக்கின் பழைய ஃபார்ம் பிரச்னைக்குரியதே. ஆனால் சமீப காலங்களில் அவரின் பேட்டிங் நன்றாக மேம்பட்டிருக்கிறது. சங்கக்காராவின் ஸ்ட்ரிட்க்ட்டான கட்டளையைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் 20,25 ஓவர்கள் வரை வீசி பழகியிருக்கிறார். இதற்கு மேலும் நிர்வாகம் அவரைத் தாங்காது என்பதால் இந்த சீசனில் நன்றாக விளையாட எத்தனிப்பார்.
குல்தீப் சென் : கடந்த சீசனில் சாம்சன் அண்ட் கோ கண்டெடுத்த வைரம். பட்டை தீட்டினால் இந்திய அணியின் நிரந்தர பவுலராக வாய்ப்பிருப்பதாக கருதப்படுபவர். கடைசியாய் ஆடிய 10 போட்டிகளில் மொத்தமாய் 22 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். பிரஷித் இல்லாத நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வகையில் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்.
பட்லர், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெய்ட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், அஸ்வின், சஹல், போல்ட், குல்தீப் சென்.
இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.
இதன்படி ராஜஸ்தான் அணியின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
முன் சொன்னதுபோல பெரும்பாலும் சாம்சன் பவுலர்களைத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம்.
முருகன் அஸ்வின் (சென்னை, டெல்லி போன்ற மைதானங்களில் இன்னொரு ஸ்பின்னரை வைத்து விக்கெட்கள் வீழ்த்த)
சந்தீப் சர்மா (ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும்போது)
ஒபெட் மெக்காய் (அணியில் மூன்று வெளிநாட்டு பிளேயர்கள் ஆடும்போது இவரை பவுலிங் பேக்கப்பாக பயன்படுத்தலாம்.)
நவ்தீப் சைனி (சந்தீப்பிற்கு சொன்ன அதே காரணம்தான். பவுலர் தேவைப்படுவது பவர்ப்ளேயிலா, டெத்திலா என்பது பொருத்து யாரென முடிவு செய்யப்படலாம்)
ஆகாஷ் வசிஷ்ட் (ஒரு இந்திய ஆல்ரவுண்டருக்கான தேவை எழும்போது)
தொடக்கத்தில் சொன்னதுபோல, மற்ற அணி வீரர்கள் உக்கிரமாய் தங்களுக்குள் மோதிக்கொண்டாலும் எல்லாருக்கும் ராஜஸ்தான் மீது ஒரு குட்டிப்பாசம் உண்டு. நம் பேவரைட் அணி ஜெயிப்பது நம் வீட்டாள் ஜெயிப்பது போல என்றால் இவர்கள் ஜெயிப்பது நம் நண்பன் ஜெயிப்பதைப் போல. போக, சாம்சன் கோப்பை வெல்லும்பட்சத்தில் தேர்வுக்குழு இனியும் காரணங்கள் சொல்லித் தப்பிக்க முடியாது. எனவே பல்லாயிரம் கோடி மதிப்பிலான கோப்பையை விட அதிக கனம் சாம்சன் மீதிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு. பார்ப்போம்.