நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தான் அந்த அணி, பெருமையாகக் கொண்டாடி வருகிறது. அதேநேரத்தில், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, மைதானத்தில் காத்திருந்த சிஎஸ்கே வீரர்களை, அந்த அணி கண்டுகொள்ளாமல் இருந்தது கடும் விமர்சனத்திற்கு வழிவகுத்தது.
குறிப்பாக, ஆர்சிபி வீரர்களுக்காக சில நிமிடங்கள் காத்திருந்த தோனி, பின்னர் மைதானத்தைவிட்டு வெளியேறிச் சென்றார். அவர் வெளியேறி சென்றபோதுகூட, அங்கே நின்றிருந்த ஆர்சிபி அணியின் உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தோனி கைகுலுக்கிய பின்னரே ஓய்வறைக்குச் சென்றார். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் ஆர்சிபி ரசிகர்கள் பலரும், தோனி தங்கள் அணியை அவமதித்துவிட்டதாக அவர்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், தோனி குறித்து கேலி, கிண்டல் செய்தும் அவதூறான கருத்துகளையும் பரப்பி வருகின்றனர். தவிர, சிஎஸ்கே ரசிகர்களையும் அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக, அந்தப் போட்டி முடிந்தவுடன் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே இருந்த சிஎஸ்கே ரசிகர் ஒருவரை, நூற்றுக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு, அவரை கிண்டலும், கேலியும் செய்தனர்.
அவர் முகத்துக்கு நேராக வந்து கோஷம் எழுப்பினர். அது மட்டுமின்றி, அவரை தூக்கிக் குலுக்கினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து, பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதற்கே இந்த ஆட்டம் போடுகிறீர்களே, ஒருவேளை... இதில் தோல்வியடைந்து வெளியேறி இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்சிபிக்கு எதிராக கேள்வியை எழுப்பி வருகின்றனர்.