ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றியை பதிவு செய்தது. வெற்றி பெற வேண்டிய இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வீரர்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பினர்.
இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகள் என மொத்தம் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
தோல்விக்குப் பின் விராட் கோலி கூறுகையில். “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த போட்டியை நாங்களே எதிரணிக்கு பரிசாக கொடுத்து விட்டோம். இந்த தோல்வியை அடைவதற்கு தகுதியான நபர்கள் நாங்கள். பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தார்கள். ஆனால், எங்களுடைய பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது எதிரணிக்கு ரன்களை பரிசாக கொடுப்பது போல் ஆகும்.
ஆட்டத்தில் நாங்கள் முக்கியமான கேட்சுகளை கோட்டை விட்டோம். இதுவே எங்களுக்கு 20 முதல் 30 ரன்களை கூடுதலாக அடிக்கும் நிலையை உருவாக்கியது. நாங்கள் பேட்டிங்கில் எப்போதும் நன்றாகவே தொடங்குகிறோம். ஆனால் எளிதாக எங்களுடைய விக்கெட்டுகளை இழந்து விடுகிறோம். நாங்கள் ஆட்டம் இழந்த எந்த பந்துமே விக்கெட்டை எடுக்கக் கூடிய பந்துகள் அல்ல.
ஒரே ஒரு பார்ட்னர்சிஷ் எங்களுக்கு சரியாக அமைந்திருந்தால் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். சொந்த மண்ணிலேயே தோல்வியை சந்தித்து வருவதால், மற்ற மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயமும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே அது எங்களுக்கு கடைசி நேரத்தில் கை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.