ஹென்ரிச் கிளாசன் அக்சர் பட்டேல் வீசிய 15வது ஓவரில் 24 ரன்களை விளாசிய பிறகு, தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 30 பந்துகளுக்கு 30 ரன்கள் என மாறி எல்லாமே இந்தியாவின் கைகளை விட்டுச்சென்றது. அந்த இடத்திலிருந்து எப்படி இந்திய அணி வெற்றிபெற்றது என்று நினைத்தால், இப்போது கூட எதோ மேஜிக் நிகழ்ந்தது போலவே பிரம்மிப்பாக இருக்கிறது.
இந்திய அணியின் கைகளில் எதுவும் இல்லாத போதிலும் அவர்கள் ஒன்றை மட்டும் சரியாக செய்ய தவறாமல் இருந்தனர். அழுத்தமான நேரத்தில் இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் பதட்டமடையவில்லை, ஏதாவது ஒருவீரர் பதட்டம் அடைந்திருந்தால் கூட இந்திய அணியின் கைகளில் இருந்து தென்னாப்பிரிக்காவின் கைகளுக்கு கோப்பை சென்றிருக்கும்.
”பதட்டமில்லாமல் வந்து ஸ்லோ டெலிவரியை வீசி கிளாசனை வெளியேற்றிய ஹர்திக் பாண்டியா, சிறிது கூட கால்களில் அழுத்தம் இல்லாமல் சிக்சருக்கு சென்ற பந்தை லாவகமாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ், ஸ்டெடியாக வந்து யான்சனின் ஸ்டம்புகளை தகர்த்த பும்ரா, அழுத்தமான நேரத்தில் சரியான லெந்துகளில் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்” என இந்திய வீரர்கள் அனைவரும் தங்களுடைய பதட்டத்தை வெளிக்காட்டாமல் இறுதிவரை திடமாக நின்றதே இந்திய அணி ஒரு மாபெரும் வெற்றியை ருசிக்க பெரிய காரணமாக அமைந்தது.
2024 டி20 உலகக்கோப்பையின் வெற்றிக்கு முந்தைய கடைசி 5 ஓவர்கள் எப்படி இருந்தது என்பது குறித்து அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரோகித்சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
அழுத்தமான 5 ஓவர்கள் குறித்து பேசிய ரோகித் சர்மா, “திடீரென எல்லாம் கைமீறி போய்விட்டது, நான் முற்றிலும் வெறுமையாக இருந்தேன். ஆனால் அதை தலையில் ஏற்றி அதிகதூரம் நான் பார்க்கவில்லை. இந்த நேரத்தில் நம் கையில் என்ன இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம் என்பதை உணர்ந்தேன். அனைவரும் அமைதியாக இருந்து எங்கள் திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது” என்று இந்திய கேப்டன் கூறினார்.
மேலும், “தென்னாப்பிரிக்காவுக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோது, அழுத்தமான நேரத்தில் நாங்கள் வீசிய 5 ஓவர்கள் எவ்வளவு அமைதியாக நாங்கள் இருந்தோம் என்பதைக் காட்டியது. நாங்கள் எதையும் பற்றி அதிகம் யோசிக்காமல் எங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினோம். நாங்கள் பீதி அடையவில்லை. எங்கள் தரப்பிலிருந்து அது மிகவும் தேவையானதாக இருந்தது" என்று அவர் மேலும் கூறினார்.