நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய வீரருமான ரோகித் சர்மாவின் இரண்டு காணொளிகள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பரவியது.
குறிப்பாக கொல்கத்தா அணியுடனான போட்டியின் பயிற்சியின்போது, கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் பேசிய உரையாடல் மிகப்பெரிய அளவில் பரவியது. இதனை அடுத்து கொல்கத்தா அணியின் சமூக வலைதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. மும்பை அணியில் தற்போது இருக்கக்கூடிய சிக்கல்களை ரோகித் சர்மா அந்த காணொளியில் பேசி இருந்தார்.
இதேசூழலில் லக்னோ மற்றும் மும்பை போட்டியின்போது கூட ரோகித் சர்மா வேகப்பந்து வீச்சாளரான தவால் குல்கர்னியுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது கேமராவைப் பார்த்த உடனே கேமராமேனிடம் ஆடியோவை ஆஃப் செய்யுமாறு தெரிவித்தார். இந்த காணொளி கூட ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் செயல்கள் கேமராவில் பதிவு செய்யப்படுவது வேதனை அளிக்கிறது. பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளின்போது உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறது. நண்பர்கள் மற்றும் சகவீரர்களுடன் பேசும் தனிப்பட்ட உரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் ரெக்கார்ட் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதைக் கூட ஒளிபரப்பு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது.
இது தனியுரிமையை மீறும் செயல். சமீபத்தில் எனது உரையாடல் வெளியானது தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல். ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற செயல்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையே நம்பிக்கையை சீர்குலைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.