2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரை மேலும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதற்காக "IMPACT PLAYER" விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விதிமுறையின் படி, போட்டியில் பங்குபெறும் 11 வீரர்களை தவிர, கூடுதலாக ஐந்து வீரர்களை அணியின் கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம்.
அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மையைப் பொறுத்து போட்டியின் எந்த இடத்திலும் பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவர் அவுட்டாகும்வரை / ஓவர் முடியும்வரை விளையாடலாம். இம்பேக்ட் வீரர்கள் இறங்கிய பின்பு, வெளியேறிய வீரர்கள் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.
இந்த புதிய விதிமுறையானது 2023 ஐபிஎல் தொடரை ஹிட்டடிக்க வைத்து, பல ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. டாஸ் வென்றால் போட்டியையே வென்றுவிடலாம் என்ற மனப்பான்மையை இந்த விதிமுறை மாற்றி, வெற்றியின் போக்கு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற விறுவிறுப்பை கூட்டியது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் இந்த இம்பேக்ட் விதிமுறையில் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Club Prairie Fire என்ற யூடியூப் சேனலில் பேசிய ரோஹித் சர்மா, “உண்மையைச் சொல்லவேண்டுமானால் நான் இம்பேக்ட் வீரர் என்ற விதிமுறையின் ரசிகன் இல்லை. இது ஆல் ரவுண்டர்களை பின்னுக்குத் தள்ளப்போகிறது. சிவம் துபே, வாசிங்டன் சுந்தர் போன்றவர்கள் பந்துவீசாதது நமக்கு நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகர்கள் இதுகுறித்து கூறுகையில், “வரையறுக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட்டில், ஹர்திக் பாண்டியாவின் பங்கு எத்தனை முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு மாற்றாக ஒரு வீரரை உருவாக்க வேண்டும் என்பது அத்தனை அவசியமானதும் கூட. இந்த இம்பேக்ட் ப்ளேயர் விதி அதற்கு தடையாக இருப்பதுபோன்று தோற்றம் அளிக்கிறது.
அதேநேரத்தில் ஆல் ரவுண்டர்களின் தாக்கம் உலக அளவில் அதிகமாக உள்ளது. அணியின் வெற்றியை நிர்ணயிப்பதிலும், ஆட்டத்தின் போக்கை மாற்றியமைப்பதிலும் ஆல் ரவுண்டர்கள் முக்கியப்பங்காற்றுகின்றனர். அதேநிலை இந்தியாவிலும் ஏற்பட வேண்டும்” என்கின்றனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் விளையாடும்படத்தில், ரோகித் சர்மா தனது 250 ஆவது ஐ.பி.எல் போட்டியில் களம் காண்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனிக்குப் பிறகு ரோகித் சர்மா இந்த சாதனையை செய்ய உள்ளார்.