நடப்பு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத் தொகையும் அளிக்கப்பட்டது. முன்னதாக, இந்தியா சாம்பியானானபோது அந்த வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது, தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் இதர வீரர்களும் தூக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவரும், ஓர் உலகக்கோப்பையை வென்றுகொடுத்த உற்சாகத்தில் இந்திய அணியிலிருந்து விடைபெற்றார். இந்த நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா உருக்கமான பதிவு ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ”என் இனிய சகோதரர் ராகுலுக்கு, என்னுடைய உணர்ச்சிகளை சரியான வார்த்தையை பயன்படுத்தி வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன். ஆனால் அது முடியுமா என்று தெரியவில்லை. ஏதோ இந்தப் பதிவில் அதை நான் முயற்சி செய்திருக்கிறேன். என் சிறு வயதில் இருந்து, பல கோடி மக்களைப்போல் நானும் உங்களை பார்த்துத்தான் வளர்ந்தேன். அது மட்டுமல்லாமல், உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். இந்த கிரிக்கெட் விளையாட்டில் நீங்கள் ஒரு சிறந்த நட்சத்திரமாக விளங்கினீர்கள். நீங்கள் பேட்ஸ்மேனாக என்ன சாதனைகள் படைத்தீர்களோ, அதை எல்லாம் வாசல் கதவிலேயே விட்டுவிட்டு சாதாரண ஒரு பயிற்சியாளராக எங்களுடன் வந்து கைகோர்த்தீர்கள்.
நீங்கள் எங்களுடைய தரத்திற்கு வந்து எங்களைப் பார்த்துக்கொண்டீர்கள். உங்கள் குணத்தைப் பற்றிச் சொல்ல இதுவே போதும் என்று நினைக்கிறேன். இந்த டி20 உலகக்கோப்பை என்பது உங்களுக்கான பரிசு. இந்த கிரிக்கெட் மீது நீங்கள் எவ்வளவு காதல் வைத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் பணியாற்றிய அந்த நிகழ்வுகளை நான் என்றும் மறக்க மாட்டேன். உங்களை, ’எனது கிரிக்கெட் மனைவி’ என்றுதான் என்னுடைய மனைவி அழைப்பார்.
அப்படி அழைக்கப்படுவதற்கு நான் அதிர்ஷ்டம் செய்ததாக நினைக்கிறேன். உலகக்கோப்பை என்ற ஒரு விஷயம் மட்டும்தான் உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இல்லாமல் இருந்தது. தற்போது அதுவும் நமது கூட்டு முயற்சி மூலம் கிடைத்துவிட்டது. உங்களை என் நம்பிக்கை, என்னுடைய பயிற்சியாளர் மற்றும் நண்பர் என்று கூறிக்கொள்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார். அது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: 121 பேர் பலியான ஹத்ராஸ் சம்பவம்| 855 பக்கங்கள் கொண்ட அறிக்கை.. வெளியான புது தகவல்!