2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிய அனைத்து லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி போட்டி அனைத்திலும் வெற்றிபெற்ற இந்திய அணி, 2011-க்கு பிறகு சொந்த மண்ணில் கோப்பையை ஏந்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணியின் தரமான பந்துவீச்சுக்கு எதிராக 240 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி, கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது.
2023 உலகக்கோப்பை பைனலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு விரக்தியில் இருந்த ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பையில் கூட விளையாட மாட்டார் என்று சொல்லப்பட்டது. அதையும் மீறி விரைவில் தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை கேப்டனாக ரோகித் சர்மா வழிநடத்துவார் என்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய ஓய்வை குறித்து ஓபனாக பேசியுள்ளார் ரோகித்.
'Breakfast With Champion’ என்ற உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோகித் சர்மா, தன்னுடைய ஓய்வை குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசையிருப்பதாக கூறிய ஹிட்மேன், 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ரோகித் சர்மா, “உண்மையில் ஓய்வு பெறுவதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் வாழ்க்கை எங்கு அழைத்துச் செல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. தற்போது நான் இன்னும் நன்றாக விளையாடுகிறேன் என நம்புகிறேன், அதனால் இன்னும் சில வருடங்கள் தொடரப் போகிறேன். உண்மையில் உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறேன், 2025-ல் சாம்பியன்ஸ் டிரோபி இறுதிப் போட்டி உள்ளது, இந்தியா அதைச் செய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் ஒருநாள் உலகக்கோப்பை குறித்து பேசிய அவர், “எனக்கு 50ஓவர் உலகக் கோப்பைதான் உண்மையான உலகக் கோப்பை. நாங்கள் அந்த உலகக் கோப்பையைப் பார்த்துத்தான் வளர்ந்தோம். 2023 உலகக்கோப்பையில் எல்லாமே எங்களுடைய கையில் இருந்தது, எந்த இடத்திலும் நாங்கள் தவறிழைக்கவில்லை. எதாவது தவறு செய்தோமா என்றுகூட நினைவில் இல்லை. எல்லாம் சரியாக இருந்தும் ஒரு மோசமான நாள் அமைந்தது, அதனால் மட்டுமே நாங்கள் தோற்றோம்” என்று பேசிய ரோகித் சர்மா 2027 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.