2024 ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே ‘ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ், ஹர்திக் பாண்டியா’ என்ற மூன்று பெயர்கள்தான் பெருமளவில் தலைப்புச் செய்திகளில் இருந்துவருகின்றன. 2023 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு, 2024 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அதிலிருந்துதான் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா பெயர்களுக்கு இடையேயான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியது, ரோகித் சர்மாவின் கேப்டன்சி பறிபோனதற்கு காரணம் மற்றும் 5 கோப்பை வென்ற ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது என பல விஷயங்களால் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து சத்தமிட்டு வரும் ரசிகர்கள், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், நாய் ஒன்று மைதானத்திற்குள் வர அதையும் “ஹர்திக் ஹர்திக்” என சத்தமிட்டு வெறுப்பின் உச்சிக்கே சென்றனர்.
இப்படி ஹர்திக் பாண்டியா மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக ரோகித் சர்மா செய்த செயல் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயத்தையும் தொட்டுள்ளது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி தோல்வியை தழுவியிருந்தாலும், மும்பை ரசிகர்கள் ரோகித்தின் செயலால் நெகிழ்ந்துள்ளனர்.
மும்பை அணியின் முதலிரண்டு போட்டிகளிலும் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் எப்படி சத்தமிட்டார்களோ, அதேபோல மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றும் அதிகப்படியான சத்தத்தை எழுப்பினர்.
அதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு நேற்று டாஸ் போடும் போது ”ரோகித் ரோகித்” என ஆரவாரம் செய்த ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை பேசவிடாமல் செய்தனர். அப்போது களத்தில் இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்” என ரசிகர்களை எச்சரிக்கை செய்தார். ஆனாலும் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக சத்தமிட்டனர்.
ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக சத்தமிட்டு ஆரவாரம் செய்ய, ஃபீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மா, ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்தார். ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து இரண்டு மூன்று முறை ரோகித் சர்மா செய்த செயல்தான் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது.
அமைதியாகும் படி தொடர்ந்து கைகளை கொண்டு சமிக்ஞை செய்த ரோகித்தின் செயலை பாராட்டிவரும் ரசிகர்கள், ”இதனால்தான் ரோகித் சர்மா எங்களுக்கு ஸ்பெஷல்” என்றும், ”ஒவ்வொரு நாளும் ரோகித்தின் மீதிருக்கும் மரியாதை உயர்ந்துகொண்டே போகிறது” என்றும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.