2024 ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றநிலையில், இறுதிப்போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் கலக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. இதன்மூலம் அந்த அணி தங்களுடைய கோப்பை எண்ணிக்கையை 3-ஆக உயர்த்தியுள்ளது.
ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த போதும், அவருடைய திறமையை நிரூபிக்கும் அளவிலான வாய்ப்புகளில் நடப்பு ஐபிஎல் தொடரில் கிடைக்கவில்லை. அவர் இந்த தொடர் முழுவதும் வெறும் 168 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும் கோப்பையை வென்றதில் ரிங்கு சிங் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ஆனால் டி20 உலகக்கோப்பையில் ரிங்கு சிங் இடம்பெறாதது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தன்னுடைய வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
2024 ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு டி20 உலகக்கோப்பையில் இடம்பெறாமல் போனது குறித்து பேசிய ரிங்கு சிங், “ஆமாம், நன்றாக விளையாடிய போதும் உலகக்கோப்பையில் தேர்வாகாதது யாருக்குமே வருத்தமாகத்தான் இருக்கும். நான் ஆரம்பத்தில் மிகவும் வருத்தப்பட்டேன், ஆனால் உண்மையில் இந்தமுறை என்னால் டீம் காம்பினேஷனுக்காக மட்டுமே தேர்வாக முடியாமல் போனது. பரவாயில்லை, நம் கையில இல்லாத விஷயத்தை பற்றி அதிகமா யோசிக்கக் கூடாது” என்று பேசினார்.
ரோகித் சர்மா எதாவது கூறினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ரோகித் பையா ஸ்பெசலாக எதுவும் கூறவில்லை. ஆனால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள்ளாகவே உலகக்கோப்பை வருகிறது, நீ தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று மட்டும்” கூறியதாக தெரிவித்தார்.
ஐபிஎல் கோப்பை வென்றது குறித்து கூறிய ரிங்கு சிங், “அது ஒரு சிறப்பான உணர்வு. என்னுடைய கனவு நனவாகிவிட்டது, நான் 7 ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன், உண்மையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கவுதம் கம்பீர் சாருக்கு நன்றி, இறுதியாக நான் ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டேன். அது கடவுளின் திட்டம்” என்று டைனிக் ஜாக்ரனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.