2024 டி20 உலகக்கோப்பை தொடரானது முதன்முதலாக அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இதில் 20 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திய நிலையில், இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் முன்னேறின.
இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
அமெரிக்காவில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போதே கிரிக்கெட் ரசிகர்களால் பல்வேறு விமர்சனங்களை பெற்றது. அதில் “மோசமான ஆடுகளம் மற்றும் போட்டி நடைபெறும் நேரங்கள்” இந்த இரண்டு விஷயங்களால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
‘3 மாதத்தில் அவசர அவசரமாக கட்டப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம், பெரும்பாலான போட்டிகள் அதில் நடத்தப்பட்டது, மோசமான பிட்ச்சால் பந்துகள் சீரில்லாமல் எழும்பியது, குறைவான ஸ்கோர்கள் கொண்ட போட்டிகள், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் முறையில்லாமல் நடத்தப்பட்ட போட்டிகள்’ என ரசிகர்கள் ஐசிசி மீதி மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அதில் உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு அமெரிக்க ஆடுகளம் மோசமான ஆடுகளமாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில்தான், அமெரிக்காவில் நடத்தப்பட்ட 2024 டி20 உலகக்கோப்பை தொடரால் சுமார் ரூ.167 கோடி ஐசிசி-க்கு இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியாகியிருக்கும் தகவலின் படி, “2024 டி20 உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்காவில் நடத்தியதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) சுமார் ரூ. 167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கும் ஐ.சி.சி வருடாந்திர மாநாட்டின் போது இதுகுறித்து விவாதிக்கப்படவிருக்கிறது. ஆண்டு பொதுக் கூட்டத்தின் (AGM) ஒன்பது அம்ச நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இந்த தலைப்பு இல்லை என்றாலும், இது நிகழ்வுக்குப் பிந்தைய அறிக்கையாக விவாதிக்கப்படும்" என்று பிடிஐ மேற்கோள்காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.