கோப்பைக்கும் ஆர்சிபி அணிக்குமான பந்தம் என்பது 16 வருடங்களாக விரிசல் பந்தமாகவே இருந்துவந்தது. கோப்பை வெல்லவேண்டுமென்ற 16 வருட கனவை, ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி மகளிர் அணி 2024 உமன்ஸ் பிரீமியர் லீக் கோப்பையை வென்று நனவாக்கியது. ஆர்சிபி ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரண்டையும் சேர்த்து கோப்பை வென்ற முதல் ஆர்சிபி கேப்டன் என்ற பெருமையை ஸ்மிரிதி மந்தனா பெற்றார்.
ஆர்சிபி பெண்கள் அணிக்கு 2024 மகளிர் ஐபிஎல் தொடர் வெற்றிகரமான தொடராக முடிவடைந்த நிலையில், ஆண்கள் தங்களுடைய முதல் கோப்பைக்காக தயாராகிவருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், RCB அன்பாக்ஸ் நிகழ்வை அணி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில், பங்கேற்க ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நிரம்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆர்சிபி பெண்கள் மற்றும் ஆர்சிபி ஆண்கள் அணி இரண்டு பேரும் RCB அன்பாக்ஸ் நிகழ்வில் பங்கேற்க வந்தனர். அப்போது கோப்பை வென்ற ஆர்சிபி பெண்கள் அணிக்கு, ஆர்சிபி ஆண்கள் அணி மரியாதை செய்தது பார்ப்பதற்கு அற்புதமான காட்சியாக இருந்தது.
ஆர்சிபி அணி பயிற்சியாளர்கள், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல் அடங்கிய ஆர்சிபி ஆண்கள் அணி, பெண்கள் அணிக்கு மரியாதை செய்யும் விதமாக இரண்டு பக்கமும் வரிசையாக நின்றனர். இரண்டு பக்கமும் ஆண்கள் அணி வீரர்கள் நின்றிருக்க, கோப்பையை கையில் ஏந்திய படி மைதானத்திற்குள் நுழைந்த ஸ்மிரிதி மந்தனா தன்னுடைய பெண்கள் அணியை வழிநடத்தினார். கைத்தட்டி வரவேற்ற ஆண்கள் அணி, பெண்கள் அணிக்கு தங்களுடைய மரியாதையை வெளிப்படுத்தினர்.
ஆர்சிபி ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, ஆர்சிபி ரசிகர்களுக்கிடையேயான அற்புதமான உறவை இந்த ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வு பிரதிபலித்துள்ளது. கோப்பையுடன் 2024ம் ஆண்டை துவங்கியிருக்கும் ஆர்சிபி அணி, ஐபிஎல் கோப்பையையும் வென்று இரட்டிப்பு சாதனையை பதிவுசெய்யவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.