நடப்பு ஐபிஎல் தொடர், அடுத்தகட்டத்தைத் தொட இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளன. அதற்காக, புள்ளிப் பட்டியலில் இடம்பிடிக்க சில அணிகள் போட்டிபோட்டு வருகின்றன. தற்போதைய பட்டியலின்படி, கொல்கத்தா அணி 9 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் வெற்றிபெற்று 2வது இடத்தில் உள்ளது. 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடிக்க சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
சென்னை அணி 7 போட்டிகளிலும், பெங்களூரு அணி 6 போட்டிகளிலும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன. இதில், சென்னை அணி அடுத்த சுற்றில் நுழைய பெங்களூரை வீழ்த்தினாலே போதுமானது. ஆனால், பெங்களூரு சென்னை அணியை வீழ்த்த வேண்டுமானால் 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 11 பந்துகளை மீதம்வைத்தோ வீழ்த்த வேண்டும். ஆக, இவ்விரு அணிகளும் வாழ்வா சாவா என்கிற நிலையில், மே 18ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இதில், வெற்றிபெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கான போட்டியின்போது, இரவு 8 மணி முதல் 11 மணி வரை 80 சதவிகிதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் தற்போதே கவலையடையத் தொடங்கி உள்ளனர். அதேநேரத்தில், மழை பெய்தால் எந்த அணிக்கு சாதகம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், புள்ளிப் பட்டியலில் சென்னை அணியின் ரன் ரேட் +0.528 ஆக உள்ளது. பெங்களூரு அணியின் ரன் ரேட் +0.387 ஆக உள்ளது. இதனால் மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், மழை காரணமாக ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அன்றைய போட்டியிலும் டாஸே முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் டாஸுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால், பெங்களூருவும் வெற்றிபெற சாதகம் இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: ”என்னை நீங்கள் பார்க்கவே முடியாது” - ஓய்வு குறித்து விராட் கோலி!