அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடைசிப் பந்து வரை பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சி.எஸ்.கே. அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 5-வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டும், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டியும் வெற்றிப் பெற்றுத் தந்தார் ரவீந்திர ஜடேஜா.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே அணி. மும்பை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக சிஎஸ்கே 2010, 2011, 2018, 2021-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தது.
போட்டிக்குப் பிறகு ஜடேஜா பேசுகையில், “எனது சொந்த மண்ணில், இவ்வளவு ரசிகர்களுக்கு முன்பாக சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. போட்டி குஜராத்தில் நடைபெற்றாலும், சென்னை அணிக்கு ஆதரவு கொடுப்பதற்காக இங்கு அதிகமான ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்களின் ஆதரவும் மிகப்பெரியது. மழை நிற்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளுக்கு மேலாக அவர்கள் காத்திருந்தனர்.
எங்களது இந்த வெற்றியை, எங்கள் அணியின் மிக முக்கியமானவரான தோனிக்கு அர்பணிக்க விரும்புகிறோம். என்ன ஆனாலும் பராவாயில்லை முடிந்தவரை அடிப்போம் என்ற திட்டத்தோடு தான் கடைசி இரண்டு பந்துகளையும் எதிர்கொண்டேன். மோஹித் ஸ்லோ பால் அதிகம் வீசக்கூடியவர் என்பதால் நேராக அடிக்க நினைத்தேன். அப்படியே செய்தேன். சென்னை அணியின் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து வைத்த ஜடேஜா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
மேலும் கடைசி இரண்டு பந்துகளையும் கேப்டன் தோனி பார்க்காமல் தலையை கீழே குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். அப்போது 5-வது பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தும், கடைசி பந்தில் பவுண்டரி அடித்தும் சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். சிஎஸ்கே வென்றுவிட்டது என்பது கூட தெரியாமல் தோனி தலை குனிந்தபடியே இருந்தார். வின்னிங் ஷாட் அடித்ததும் ஜடேஜா நேரடியாக தோனியை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிப்பிடித்தார். அப்போது தோனி ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடினார். அச்சமயத்தில் தோனி நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்.
இந்நிலையில் ஜடேஜாவை தூக்கிவைத்து தோனி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் புகைப்படத்தையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிபி-யாக வைத்துள்ளார் ஜடேஜா.
2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஏற்ற பிறகு, அணி தொடர்ந்து தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் ஜடேஜாவின் சொதப்பல் கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனம் எழுந்ததால் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனிக்கு கொடுத்துவிட்டு விலகினார் ஜடேஜா. இச்சம்பவத்துக்குப் பிறகு ஜடேஜாவுக்கும் கேப்டன் தோனிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக பல யூகங்கள் கிளம்பின. ஜடேஜாவின் நடவடிக்கைகள் தோனி மற்றும் சி.எஸ்.கே.வுக்கு எதிராக இருந்து வந்ததாகவே கூறப்பட்டு வந்தது. ஆனால், எல்லா யூகங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில் ஜடேஜா மற்றும் தோனிக்கு இடையில் இருக்கும் பாசப்பிணைப்பை நேற்று பார்க்க முடிந்தது.