2024 ஐபிஎல் தொடரில் அபாரமான வெற்றிகளை பதிவுசெய்துவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்திவருகின்றன.
வெற்றிகளை குவித்துவரும் இந்த இரண்டு அணிகள் மோதினால் யார் பக்கம் வெற்றிசென்று உட்காரும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்தது. காரணம் இவ்விரு அணிகளின் வெற்றிக்கு பக்கபலமாக கம்பீர் மற்றும் சங்ககரா இருவரும் மூளையாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு ஜீனியஸ் மூளைகளுக்கு இடையேயான போட்டி என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி, டிரெண்ட் போல்ட்டின் அபாரமான பந்துவீச்சுக்கு எதிராக பொறுமையாகவே ஆட்டத்தை தொடங்கியது.
சால்ட் 10 ரன்னில் விரைவாகவே வெளியேற, நல்ல தொடக்கத்தை எடுத்துவர முடியாமல் கேகேஆர் அணி தடுமாறியது. ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இளம் வீரர் ரகுவன்சி, அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விரட்டி ரன்களை எடுத்துவந்து ரிதமை கொண்டுவந்தார். அதுவரை பொறுமையாக இருந்த சுனில் நரைன், பேட்டிங்கில் ஒரு அசுரத்தனமான ஆட்டத்தை எடுத்துவந்தார்.
எப்போதும் பவர்பிளேவில் மட்டுமே அடித்து வெளுக்கும் சுனில் நரைன், இந்தமுறை கடைசிவரை களத்தில் நின்று RR அணியின் மிடில் ஆர்டர் தூண்களான “அஸ்வின் மற்றும் சாஹல்” இருவரின் பந்துவீச்சையும் அடிவெளுத்து வாங்கினார்.
அஸ்வினை சொல்லிசொல்லி அடித்த சுனில் நரைன், சாஹலை சின்னாபின்னமாக்கினார். ஸ்பின்னர்களைதான் வெளுக்கிறார் என்றால் வேகப்பந்துவீச்சாளர்களையும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட நரைன் ஈடன் கார்டனை திருவிழாவாகவே மாற்றினார்.
ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் இடையில் வந்து சிக்சர் பவுண்டரி என விரட்டினாலும், இறுதிவரை களத்திலிருந்த சுனில் நரைன் ஹீரோவாக ஜொலித்தார்.
13 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என ஸ்டேடியத்தின் நாலாபுறமும் சிதறடித்த நரைன், 49 பந்துகளில் சதத்தை எடுத்துவந்து மிரட்டிவிட்டார். கடைசியாக வந்த ரிங்கு சிங் அவருடைய பங்குக்கு 2 சிக்சர்களை பறக்கவிட, 20 ஓவர் முடிவில் 223 ரன்களை வாரிகுவித்தது கொல்கத்தா அணி.
109 ரன்களை குவித்த சுனில் நரைன் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை எடுத்துவந்து கலக்கிப்போட்டார்.
யாராலும் முறியடிக்க முடியாத ஒரு சாதனையை படைத்த சுனில் நரைன், கவுதம் கம்பீருக்கு பெருமை சேர்த்தார். ஐபிஎல் தொடரில் சுனில் நரைனை தொடக்க வீரராக களமிறக்கிய பெருமை, அப்போதைய கேப்டனான கவுதம் கம்பீருக்கே சொந்தமானது. தற்போது மீண்டும் KKR அணியின் ஆலோசகராக வந்திருக்கும் கம்பீர், நரைன் சதத்திற்கான பெருமைக்கு சொந்தக்காரராக மாறினார்.
224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், பட்லருக்கு பேட்டில் சரியாக படாததால், ரன்களை எடுத்துவரும் பொறுப்பை ஜெய்ஸ்வால் எடுத்துக்கொண்டார். 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடுத்தடுத்து விளாசி கெத்துக்காட்டிய ஜெய்ஸ்வால், பெரிய இன்னிங்ஸை நோக்கிய ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் அவரை அதிகநேரம் நிலைக்க விடாத அரோரா, 19 ரன்னில் வெளியேற்றி ஜெய்ஸ்வாலின் அதிரடிக்கு முற்றிப்புள்ளி வைத்தார். உடன் களத்திற்குவந்த சஞ்சுசாம்சன் 12 ரன்னில் வெளியேற, இரண்டு விக்கெட்டுக்களை விரைவாகவே இழந்த ராஜஸ்தான் அணி தடுமாறியது.
ஆனால் அடுத்து களத்திற்கு வந்த ரியான் பராக் ரன்ரேட்டை குறையவிடாமல் ஒரு குயிக் FIRE நாக் விளையாடினார். வந்ததிலிருந்தே 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு மிரட்டிய பராக்கை, சரியான நேரத்தில் வெளியேற்றிய ஹர்சித் ரானா, போட்டியை கொல்கத்தா அணியின் பக்கம் திருப்பிவிட்டார்.
உடன் ஜுரேலை 2 ரன்னில் நரைன் வெளியேற்ற, ஒரே ஓவரில் அஸ்வின் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் இருவரையும் அவுட்டாகி பெவிலியன் அனுப்பிய வருன் சக்கரவர்த்தி, வெற்றியின் பக்கமிருந்த RR அணியின் தலைமேல் இடியை இறக்கினார். நல்ல நிலைமையில் இருந்த ராஜஸ்தான் அணி திடீரென 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது.
என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்துநின்று விளையாடிய ஜோஸ் பட்லர் 36 பந்துகளில் அரைசதம் எடுத்துவந்து அசத்தினார்.
224 ரன் சேஸிங்கில் ஒரு சுமாரான ஸ்டிரைக்ரேட்டில் ஆடிய பட்லர், இறுதிவரை அவர்மீது நம்பிக்கை குறையாமல் இருந்தார். தற்போது அணியை மீட்டு எடுத்துவரும் பொறுப்பு ஜோஸ் பட்லர் மற்றும் ரோவ்மன் பவல்லின் தோள்களில் சேர்ந்தது. கடைசி பேட்டிங் ஜோடி என்பதாலும், தேவையான ரன்ரேட் 16 ரன்களுக்கு மேல் சென்றதாலும் கொல்கத்தா அணியின் பக்கமே 90 சதவீதம் வெற்றி இருந்தது.
ஆனால் சுனில் நரைன் பந்துவீச்சுக்கு எதிராக காட்டடி அடித்த ரோவ்மன் பவல், 1 பவுண்டரி 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு ரன்களை எடுத்துவர ஆட்டம் சூடுபிடித்தது. என்னதான் சிக்சர்களாக பறக்கவிட்டாலும் அடுத்த பந்திலேயே ரோவ்மன் பவல்லை வெளியேற்றிய நரைன் கலக்கிப்போட்டார். “அவ்வளவுதான் சோலி முடிஞ்சது” என்ற நிலைக்கே சென்றது ராஜஸ்தான் அணி.
ஆனால் அந்த இடத்திலிருந்து சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்ட ஜோஸ் பட்லர், தன்னுடைய பேட்டிங் ரிதமை எடுத்துவந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயம்காட்டினார். வருன் சக்கரவர்த்தி வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டிய அவர், ரஸ்ஸல் வீசிய ஓவரில் 2 சிக்சர்களை கிரவுண்டுக்கு வெளியே பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.
கடைசி 3 ஓவருக்கு 46 ரன்கள் தேவையென போட்டி மாற, ராஜஸ்தான் அணிக்கு ஒரு ஓவருக்கு 16 ரன்கள் தேவையென வெற்றி இருந்தது. 18வது ஓவரை வீசிய ஸ்டார்க் ஓவரில் சிக்சர் பவுண்டரி என விரட்டிய பட்லர் 10 ரன்களை எடுத்துவர, முக்கியமான நேரத்தில் பந்தை பிடிப்பதில் கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர் சால்ட் 1 ரன் செல்லவேண்டிய இடத்தில் 5 ரன்களை விட்டுகொடுத்து போட்டியை ராஜஸ்தான் அணியின் பக்கம் மாற்றிவிட்டார்.
“ஏன் பா சால்ட்டு வச்சிட்டியே வேட்டு” என KKR ரசிகர்கள் புலம்பவே ஆரம்பித்துவிட்டனர். 18வது ஓவரில் 18 ரன்கள் வர, 19வது ஓவரில் மறுமுனையில் இருந்த வீரருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் தான் மட்டுமே விளையாடிய பட்லர், 2 சிக்சர்களை பறக்கவிட்டு 19 ரன்களை எடுத்துவந்து கொல்கத்தா அணியை சம்பவம் செய்தார்.
களத்தில் ஓடமுடியாமலும் சோர்வாலும் துவண்டுபோன பட்லர், தன்னுடைய கால்களை மடக்கி மைதானத்திலேயே டவுன் ஆகினார். கால்களும் உடல்களும் சோர்ந்த போதிலும் நம்பிக்கையை விடாமல் இருந்த பட்லர், கடைசி 6 பந்துகளுக்கு 9 ரன்களை எதிர்கொண்டார். வருன் சக்கரவர்த்தி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய பட்லர், தன்னுடைய 7வது ஐபிஎல் சதத்தை எடுத்துவந்து மேட்ச்சை சீல் செய்தார்.
ஆனால் அடுத்த 3 பந்துகளை டாட் பந்தாக வீசிய வருன் சக்கரவர்த்தி போட்டியில் மீண்டும் உயிரை எடுத்துவந்தார். 2 பந்துக்கு 3 ரன்கள் என போட்டி மாற, 5வது பந்தில் சிங்கிள் எடுக்காமல் இரண்டு ரன்னுக்கு சென்ற பட்லர் எப்படியோ மீண்டும் க்றீஸுக்குள் வந்துசேர்ந்தார். கடைசி 1 பந்துக்கு 1 ரன் என போட்டி மாற சூப்பர் ஓவர் வருமோ என்ற எண்ணம் எல்லோரையும் சீட்டின் நுனியில் அமரவைத்தது. ஆனால் கடைசி பந்தில் வெற்றி ரன்களை எடுத்துவந்த பட்லர், ஐபிஎல் வரலாற்றில் ஒரு தரமான சேஸிங்கை எடுத்துவந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
224 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச டோட்டலை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்தது.
இறுதிவரை அவுட்டாகாமல் களத்திலிருந்த சூப்பர் ஹீரோ ஜோஸ் பட்லர், 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி 107 ரன்களை குவித்து அசத்தினார்.
போட்டிக்கு பிறகு பேசிய பட்லர், “முதலில் எனக்கு பந்து பேட்டில் படவே இல்லை. அப்போது என்மேல் எனக்கே எரிச்சலாக இருந்தது, பின்னர் என்னிடம் நானே பேசினேன், பொறுமையாக இரு ரிதம் தானாக வரும் என சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை இதற்கு முன் தோனி களத்தில் செய்து நான் பார்த்திருக்கிறேன், தோனி எப்போதும் போட்டியை கடைசிவரை எடுத்து சென்று முடித்துவைப்பார். அதைத்தான் நானும் அப்ளை செய்தேன்” எனக்கூறி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த டிவிஸ்ட்ட நாங்களே எதிர்ப்பார்க்கல என சிஎஸ்கே ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர்.
இந்தபோட்டி சுனில் நரைன் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரிடம் இருந்தும் இரண்டு சிறந்த இன்னிங்ஸை கொண்டுவந்து ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது.
முதலில் கம்பீரா? சங்ககராவா? என தொடங்கிய போட்டி, பின்னர் நரைனா? பட்லரா? என மாறி, இறுதியில் தோனியா? கம்பீரா? என முடிந்தது.
கம்பீர் என்ற கேகேஆர் அணியின் ஆணிவேருக்கு எதிராக தோனியின் ஸ்டிராடஜி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது! இந்தவெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.