'பொதுவெளியில் விமர்சனம்' - ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அஸ்வினுக்கு 25 சதவீதம் அபராதம்!

வலது கை சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தனது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அஸ்வின்,
அஸ்வின்,ட்விட்டர்
Published on

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற 17-வது ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பௌலிங்கை தேர்வு செய்ததையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்களும், தேவ்தத் படிக்கல் 38 ரன்களும், அஸ்வின் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் தலா 30 ரன்களும் எடுத்திருந்தனர்.

அஸ்வின்,
முழங்கால் காயத்தால் அவதி.. தாங்கி தாங்கி நடந்த தோனி.. ஃபிளெமிங் கொடுத்த விளக்கம்!

இதனைத் தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக துவக்க ஆட்டக்காரர் கான்வே 50 ரன்களும், தோனி 32 ரன்களும், ரஹானே 31 ரன்களும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணியில் அஸ்வின் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளும், சந்தீப் சர்மா மற்றும் ஆடம் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தனர்.

இந்தப் போட்டியில், 5-வது வீரராக களமிறங்கி 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்ததுடன், 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து ஆல் ரவுண்டராக விளங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து போட்டி முடிந்து பேட்டியளித்த அஸ்வின், தங்கள் தரப்பிடம் கருத்துக் கேட்காமலேயே அம்பயர்கள் பந்தை மாற்றி தந்தது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். பனியின் தாக்கத்தால் அம்பயர்கள் பந்தை மாற்றி தங்களுக்கு தந்தது பெரும் வியப்பாக இருந்ததாகவும், இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை எனவும், நடப்பு சீசனில் சில முடிவுகள் எனக்கு வியப்பாக இருக்கின்றது எனவும் தெரிவித்திருந்தார். பந்தை இடையில் மாற்றி தந்தது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது எனவும், இது நல்லதுக்காகவும் இருக்கலாம் அல்லது கெட்டதுக்காகவும் இருக்கலாமென தோன்றியது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதி 2.7 கீழ் லெவல் 1 குற்றத்தை அஸ்வின் ஒத்துக்கொண்டதாகவும், எனினும், லெவல் 1 நடத்தை விதிமீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது எனவும் ஐபிஎல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை அணி
ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை அணிட்விட்டர்

மேலும், அந்த அறிக்கையில் குற்றத்தின் தன்மை குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால், வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான ஐபிஎல் நடத்தை விதி 2.7 கீழ் சொல்லப்பட்டுள்ளதாவது, "ஒரு போட்டியில் நிகழும் ஒரு சம்பவம் அல்லது எந்த ஒரு வீரர், அணி அதிகாரி, போட்டி அதிகாரி அல்லது எந்தவொரு போட்டியிலும் ஒரு அணி பங்கேற்கும்போதும், பொதுவெளியில் விமர்சனம் அல்லது பொருத்தமற்ற கருத்து சொல்வது தவறானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com