ஐபிஎல் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கும் லீக் போட்டிகளின் வெற்றி, தோல்வியே அடுத்த 3 அணிகளுக்கான பிளே ஆப் சுற்றை உறுதி செய்ய இருக்கின்றன. இதற்கான வரிசையில் தற்போது 6 அணிகள் போட்டியில் உள்ளன.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆரம்ப லீக் போட்டிகளில் எல்லாம் அசத்தல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது தொடர்ச்சியான தோல்விகளால் டாப்பில் இருந்து கீழே இறங்கியுள்ளது. இருந்தாலும், நேற்று பஞ்சாப் அணியுடனான த்ரில் வெற்றியை அடுத்து, 14 புள்ளிகளுடன் இன்னும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புடன் உள்ளது.
ஆம், நாம் மேலே கூறியபடி, இன்றும், நாளையும் நடக்கும் 4 போட்டிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்தே ராஜஸ்தானின் பிளே ஆப்பின் முடிவு தெரிய வரும். ராஜஸ்தான் அணியின் நல்ல நெட் ரன் ரேட்டே (+0.148) இதற்குக் காரணமாக உள்ளது. குறிப்பாக, மும்பை மற்றும் பெங்களூருவின் வெற்றி, தோல்வி ராஜஸ்தானின் பிளே ஆப் சுற்றை நீடிக்கச் செய்துள்ளது.
இப்படியான தள்ளாட்டத்தில் ராஜஸ்தான் அணி இருந்தாலும், அவ்வணியின் தொடக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்லில் மகத்தான சாதனை ஒன்றைச் செய்துள்ளார். நடப்பு சீசனில் 14 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், 625 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், அவரது சராசரி 48.08 ஆக உள்ளது. ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது.
மேலும், இத்தொடரில் 1 சதத்தையும், 5 அரைசதங்களையும் எடுத்துள்ளார். 82 பவுண்டரிகளையும், 26 சிக்சர்களையும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 124 ரன்களை எடுத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் 625 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தேசிய அணியில் இடம் பெறாமல் ஒரு சீசனில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு ஜெய்ஸ்வால் சொந்தக்காரராகி உள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடர்களில் 25 வயதுக்குள் 600 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் 4வது இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி அணி வீரரான ரிஷப் பண்ட் உள்ளார் (விபத்தில் சிக்கியதால் தற்போது ஓய்வில் உள்ளார்). அவர், கடந்த 2018ஆம் ஆண்டு 684 ரன்கள் எடுத்துள்ளார். 2வது இடத்தில் சென்னை அணி வீரரான ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். அவர், கடந்த 2021ஆம் ஆண்டு 635 ரன்கள் குவித்துள்ளார்.
அடுத்து, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி 634 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார். அவர், இத்தகைய சாதனையை 2013ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ஜெய்ஸ்வால் உள்ளார். அவர் தற்போது 625 ரன்கள் எடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து 5வது இடத்தில் ஷான் மார்ஸ் உள்ளார். அவர், கடந்த 2008ஆம் ஆண்டு 616 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் பட்டியலிலும் 2வது இடத்தில் ஜெய்ஸ்வால் உள்ளார்.
முதல் இடத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் டு பிளஸ்ஸி உள்ளார். அவர், நடப்பு சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 702 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் 8 அரைசதங்களை அடித்திருக்கும் அவர், அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார்.