16-வது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், அசாம் மாநிலம் குஹாத்தியில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தையும், அந்த அணியை வீழ்த்தி 2-வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் அணி, புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.
இந்த நிலையில், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக, வரும் 8-ம் தேதி நடைபெறும் போட்டியில் பங்குபெறுவது சந்தேகமே என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய போட்டியில், முதல் இன்னிங்சின் போது, பஞ்சாப் அணி பேட்ஸ்மேன் ஷாருக்கான் அடித்த பந்தை, ஜோஸ் பட்லர் கேட்ச் பிடித்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது ஜோஸ் பட்லர் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் விரலில் தையல்களும் போடப்பட்டன.
தையல் போட்ப்பட்டவுடன் துவக்க ஆட்டக்காரராக ஜோஸ் பட்லரால் களமிறங்க முடியவில்லை. இதனாலேயே ராஜஸ்தான் அணி சார்பில், அவருக்குப் பதிலாக துவக்க ஆட்டக்காரராக ரவிச்சந்திரன் அஸ்வின், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் களமிறக்கி விடப்பட்டார். சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு ஜோஸ் பட்லர் அடுத்த வீரராக களமிறங்கினார். ஜோஸ் பட்லர் 19 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வெளுத்து வாங்கிய நிலையில், பவர் பிளேயில் ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பியதால், அடுத்தடுத்து வந்த வீரர்கள் மீது அழுத்தம் இறங்கியதும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
மேலும், ஜோஸ் பட்லருக்கு தையல் போடப்பட்டிருப்பதை ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் போட்டி முடிந்தபின்பு அளித்த பேட்டியில் உறுதி செய்தார். அதில், “ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கையில் கேட்ச் பிடித்தபோது, ஜோஸ் பட்லர் விரலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக தையல் போட போதுமான நேரம் இல்லாததாலேயே, அஸ்வின் முதலில் களமிறக்கப்பட்டார். பின்னர் தையல் போடப்பட்டவுடன் பட்லர் களமிறங்கினார்.
இப்போது பட்லர் உடல்தகுதியுடன் இல்லை. இது அணிக்கு சற்று பின்னடைவாகவே தெரிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு குணமடைந்து விடுமா, இல்லை ஓரிரு போட்டிகள் வெளியில் அமர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று விளக்கம் அளித்தார். பட்லரின் காயம் அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், ஜோஸ் பட்லர் பிடித்த அந்த கேட்ச்-க்காக ஸ்பான்சர் விருதையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.