“ஒரு சின்ன கிராமத்தில் நான் பனியனோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது குஜராத் அணியின் பினிஷராக இருக்கிறேன்” என்று அந்த அணியின் ஆல் ரவுண்டர் ராகுல் டிவாட்டியா தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ராகுல் டிவாட்டியா, ஐபிஎல் போட்டிகளுக்காக குஜராத் டைடன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களாக விளையாடி வருகிறார். அதற்கு முன்னதாக அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த பினிஷராக உருவெடுத்துள்ள அவர் "The Cricket Monthly" ஊடகத்துக்கு பேட்டியளித்துளார். அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் இந்திய அணிக்கான தன் கனவை வெளிப்படுத்தியுள்ளார் அவர். அதனை இங்கு காணலாம்...
“நான் தேசிய அணிக்காக விளையாடலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்வாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு கிராமத்தில் தெருக்களில் வெறும் உள்ளாடைகளுடன் கிரிக்கெட் விளையாடிய நான், இப்போது ஒரு ஐபிஎல் அணியின் ஃபினிஷராக இருக்கிறேன். இப்போது இந்திய அணியில் இடம் பெறுவதற்கான கனவை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன். இந்தக் கனவு, நான் சிறுவயதில் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும்போதே தொடங்கிவிட்டது.
தொலைக்காட்சியில் போட்டிகளை பார்க்கும்போதெல்லாம், இந்த மைதானங்களில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துக்கொண்டு நாமும் விளையாட வேண்டுமென்று தோன்றும். இப்போது அந்த கனவிற்கு மிக அருகில் வந்துவிட்டேன்.
உங்கள் இலக்கை அடைய, நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். நான் 100 சதவிதம் அதனை பின்பற்றுகிறேன். நான் இப்போது தகுதியான இடத்தில் இருக்கிறேன் என நினைக்கிறேன்" என்றுள்ளார் ராகுவ் டிவாட்டியா.