டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் இந்திய அணி இன்று (ஜூலை 27), இலங்கையை சந்திக்கிறது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ராகுல் டிராவிட் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருந்த வாழ்த்துச் செய்தியில், “ஹலோ கௌதம். இந்திய அணியின் பயிற்சியாளராக நமது உலகின் அற்புதமான பணிக்கு உங்களை வரவேற்கிறோம். பார்படாஸ் மற்றும் மும்பையில் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத சம்பவங்கள் அமைந்தது. எனது கனவுகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இந்திய அணியுடன் எனது பணியை முடித்து 3 வாரங்கள் ஆகின்றன.
எல்லாவற்றிக்கும் மேலாக இந்திய அணியுடன் என் காலத்தில் நான் செய்த நினைவுகளையும் நட்பையும் பொக்கிஷமாக வைத்திருப்பேன். இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் உங்களுக்கும் அதையே சொல்கிறேன். உங்களுக்கு முழுவதுமாக ஃபிட்டாக உள்ள வீரர்கள் அனைத்து அணிகளிலும் கிடைப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதற்காக வாழ்த்துகிறேன். உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை கொண்டவர் என்பதை நான் அறிவேன்.
எனவே இந்த வேலையில் நீங்கள் அனைத்து தரத்தையும் கொண்டு வருவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக மற்றொரு பயிற்சியாளரான உங்களுக்கு ஒரு கடைசி விஷயத்தை சொல்கிறேன்.
கவுதம்... நீங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். நீங்கள் இந்திய அணியை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதைக் கேட்டு நெகிழ்ந்துபோன கவுதம் கம்பீரும் ட்ராவிட்டுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த வாழ்த்துக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் இந்த மெசேஜ் எனக்கு மிகவும் பெரியது. அது வெற்றிகரமாக செயல்பட்டவரிடமிருந்து வந்துள்ளது என்பதால் மட்டுமல்ல. நான் விளையாடும்போது பார்த்த ஒருவரிடமிருந்து எனக்கு வாழ்த்து வந்துள்ளது மிகவும் பெரியது. இந்த விஷயத்தை நான் எப்போதும் உணர்ந்துள்ளேன். அதை பல்வேறு பேட்டிகளிலும் நான் நிறைய சொல்லியுள்ளேன். அதாவது நான் சேர்ந்து விளையாடியதிலேயே ராகுல் பாய் மிகவும் சுயநலமற்ற கிரிக்கெட்டர்.
இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையான அனைத்தையும் ராகுல் பாய் செய்துள்ளார். நான் மட்டுமல்ல தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்தளவுக்கு அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானவர்.
பொதுவாக, நான் அதிகமாக உணர்ச்சி வசப்பட மாட்டேன். ஆனால் அவருடைய இந்த மெசேஜ் என்னை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. அவருடைய இடத்தை நிரப்புவது என்பது மிகப் பெரியது. முழுமையான நேர்மறையுடன், வெளிப்படைத் தன்மையுடன் அதைச் செய்ய முடியும் என்ற நம்புகிறேன். இந்தப் பணியில் மொத்த இந்தியா மட்டுமின்றி நான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நபரான ராகுல் டிராவிட்டையும் பெருமைப்பட வைப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.