நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. 177 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில், ஹர்திக் 3 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ஆட்ட நாயகனாக 76 ரன்களை எடுத்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.
இருபது ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்றுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், உலகக் கோப்பையுடன் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவி வகித்து வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் பல்வேறு அணிகளுடனான போட்டியில் இந்தியா பல வெற்றிகளை பெற்றிருந்தாலும், 2023- ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வியை கண்டது.
இது பெரும் விமர்சனங்களை எழுப்பிய சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது கடைசி உலகக் கோப்பை தொடரை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாகவும், வீரராகவும் இருந்த போது செய்ய முடியாததை பயிற்சியாளராக இருந்து உலகக் கோப்பையை வென்று அசத்திய டிராவிட்டிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பையை பெற்ற பின்னர் ராகுல் டிராவிட்டிடம் கோப்பையை கொடுத்தபோது, வீரர்களுடன் இணைந்து தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்ந்தார்.
இவர், பயிற்சியாளராக இந்திய அணிக்கு 19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று கொடுத்திருந்த நிலையில், தற்போது டி20 உலகக்கோப்பையும் பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.