ஆர்.சி.பி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பர் ஜெயன்ட்ஸ் வெர்சஸ் சூப்பர் கிங்ஸ் போட்டி சூப்பராக தொடங்கி, 19.2 ஓவர்களில் 127/7 என லக்னோ தத்தளித்த நேரத்தில்தான், தவளை கத்தியது, இடி இடித்தது, மழை பெய்தது.
ஜெயிக்க வேண்டிய மேட்சில் மழை குறுக்கே வந்துடுச்சே என சென்னை ரசிகர்கள் சோகமாக, எங்களுக்கு ஜாலியாதான் இருக்கு என புன்னகைத்தார்கள் லக்னோ ரசிகர்கள். அடுத்த ஆட்டம், மொகாலியில் நடைபெற்றது. முந்தைய மோதலில் இரண்டு ஸ்டெம்புகளும் பல லட்ச இதயங்களும் நொறுங்கியிருந்த நிலையில் இம்முறை பஞ்சாப்பை நொறுக்கிவிடுவதென முடிவு செய்திருந்தது மும்பை அணி.
கேப்டன் ரோகித் சர்மா டாஸ் ஜெயிக்க, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
ப்ரப்சிம்ரனும் தவனும் பஞ்சாப்பின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் பச்சை. ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார் தவன். 2வது ஓவரை வீசவந்த அர்ஷத் கானை பவுண்டரியுடன் வரவேற்றார் ப்ரப்சிம்ரன். ஓவரின் 3வது பந்தில், ப்ரப்சிமரனை வழியனுப்பி வைத்தார் அர்ஷாத் கான். கீப்பர் கிஷனிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அடுத்து களமிறங்கிய ஷார்ட், அதே ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார். க்ரீன் வீசிய 3வது ஓவரில், தவனுக்கு மற்றொரு பவுண்டரி கிடைத்தது. அர்ஷாத் கானின் 4வது ஓவரை கட்டம் கட்டிய ஷார்ட், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என தெறிக்கவிட்டார். 5வது ஓவரை வீசிய ஆர்ச்சர், 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். பியூஷ் சாவ்லா உருட்டிய பந்துகளை தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கேப்டன் தவன். பவர்ப்ளேயின் முடிவில் 50/1 என நன்றாகவே தொடங்கியிருந்தது பஞ்சாப் அணி.
7வது ஓவரை வீசினார் கார்த்திகேயா. தவன் கொடுத்த கொஞ்சம் கடினமான கேட்சை, ஷார்ட் தேர்டில் கோட்டைவிட்டார் ஆர்ச்சர். 8வது ஓவரை தவன் பவுண்டரியுடன் துவங்க, அடுத்த பந்திலேயே அவரின் விக்கெட்டைக் கழட்டினார் சாவ்லா. தவன் இறங்கி வர, இஷான் ஸ்டெம்பிங் செய்தார். கார்த்திகேயாவின் 9வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சாவ்லா வீசிய 10வது ஓவரில் லிவிங்ஸ்டோன் ஒரு பவுண்டரி தட்டினார்.
10 ஓவர் முடிவில் 78/2 என தடுமாறியிருந்தது பஞ்சாப்.
அறிமுக வீரர் மத்வால் 11வது ஓவரை வீசவந்தார். முதல் பந்தே பவுண்டரிக்கு பறக்கவிட்டார் லிவிங்ஸ்டோன். இனிய ஆரம்பம்!
அதே ஓவரில் ஒரு சிக்ஸரும் அடித்தார் லிவிங்! சாவ்லா வீசிய அடுத்த ஓவரில் ஷார்ட்டின் விக்கெட் கழண்டது. நோ பாலுடன் தொடங்கிய ஆர்ச்சரின் 13வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டார் ஜித்தேஷ். அடுத்து ஒரு அகலப்பந்து. மாற்றாக வீசப்பட்ட பந்தில் இன்னொரு பவுண்டரி. கடைசிப்பந்தில் லெக் பைஸில் ஒரு பவுண்டரி. ஒரே ஓவரில் 21 ரன்கள்.
கார்த்திகேயாவின் 14வது ஓவரில் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ஜித்தேஷ். அர்ஷாத்தின் அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் லிவிங்ஸ்டோன். கடைசியாக ஒரு பவுண்டரியுடன் முடித்துவைத்தார். 15 ஓவர் முடிவில் 145/3 என மீண்டிருந்தது பஞ்சாப் அணி.
ஆர்ச்சரின் 16வது ஓவரில் லிவிங்ஸ்டோனுக்கு ஒரு பவுண்டரி. அர்ஷாத் கானின் 17வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்தார் ஜித்தேஷ். மத்வால் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் லிவிங்ஸ்டோன். அதே ஓவரில் ஜித்தேஷும் ஒரு பவுண்டரி விளாசினார். மீண்டும் வந்தார் ஆர்ச்சர்.
`ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசின பந்தை, நீ அடிக்கமாட்டே. பந்துதான் உன்னை அடிக்கும்' என வசனமெல்லாம் பேசினார்கள் மும்பை ரசிகர்கள்.
முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார் லிவிங்ஸ்டோன். அகலபந்தில் ஒரு பவுண்டரியும் போக, ஆர்ச்சர் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மத்வாலின் கடைசி ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 9 ரன்கள் மட்டுமே கிடைக்க, 214/3 என மீண்டும் 200+ ஸ்கோரோடு இன்னிங்ஸை முடித்தது பஞ்சாப் அணி. வான்கடே மைதானத்திலும் இதே 214 ரன்களைதான் அடித்திருந்தது பஞ்சாப்.
215 ரன்கள் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க களமிறங்கியது ரோகித் - கிஷன் ஜோடி. ரிஷி தவனிடம் முதல் ஓவரை கொடுத்தார் ஷிகர் தவன். ஓவரின் 3வது பந்து, டீப் தேர்டில் ஒரு சுமாரான ஷாட் ஆடி அவுட் ஆனார் ஹிட் மேன். ஐ.பி.எல் தொடர்களில் தனது 15வது வாத்து முட்டையை வாங்கிக்கொண்டு கிளம்பினார். 2வது ஓவரை வீசவந்தார் சிறுவர் சிங். க்ரீன் ஒரு பவுண்டரியும், கிஷன் இரண்டு பவுண்டரிகளும் அடித்து கொக்கு காட்டினர். ரிஷியின் 3வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ப்ரப்சிம்ரனுக்கு பதில், எல்லீஸை இம்பாக்ட் வீரராக இறக்கினார் தவன்.
சுட்டி கரணின் 4வது ஓவரில் க்ரீன் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ரிஷியின் 5வது ஓவரில் மடாரென ஒரு சிக்ஸர் அடித்தார் கிஷன். அதே ஓவரில், இன்னொரு சிக்ஸரையும் கிஷன் அடிக்க, அது பார்வையாளர் ஒருவரின் கபாலத்தில் பட்டு பறந்தது. இந்த அட்டகாசமான ஓவரை, ஒரு பவுண்டரியுடன் முடித்துவைத்தார் க்ரீன். எல்லீஸின் 6வது ஓவரில், க்ரீன் விக்கெட் காலி. டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் எடுத்தார் பாம்பு சஹார். பவர்ப்ளே முடிவில் 54/2 என ஆடிக்கொண்டிருந்தது மும்பை.
மத்வாலுக்கு பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கினார் சூர்யகுமார் யாதவ். பாம்பு சஹாரின் 7வது ஓவரில் ஒரு பவுண்டரி தட்டினார் ஸ்கை. ப்ராரின் 8வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சஹாரின் 9வது ஓவரில் ஒரு பவுண்டரியை ஸ்வீப்பினார் ஸ்கை. ப்ராரின் 10வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கலக்கினார் ஏக் காவ் மெய்ன் ஏக் கிஷன். 10 ஓவர் முடிவில் 91/2 என விரட்டிவந்தது மும்பை.
சஹாரின் 11வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார் சூர்யா. இன்னொரு பக்கம் கிஷன் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார். எல்லீஸின் 12வது ஓவரில், தனது அரைசதத்தை நிறைவு செய்தார் கிஷன். அந்த ஓவரில் அவருக்கு ஒரு பவுண்டரியும் கிடைத்தது. சுட்டி குழந்தையின் 13வது ஓவரை தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் என கபளீகரம் செய்தார் ஸ்கை. 23 பந்துகளில் அவருடைய அரைசதமும் வந்தது.
எல்லீஸின் 14வது ஓவரிலும் ஒரு பவுண்டரி விளாசினார் சூர்யகுமார். 15வது ஓவரை வீசவந்த அர்ஷ்தீப்பையும் சூர்யகுமார் ஒரு பவுண்டரி, இஷன் கிஷன் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என கலங்கடித்தனர். ஒரே ஓவரில் 21 ரன்கள். மும்பை டக்கவுட்டில் அமர்ந்திருந்த ஆர்ச்சர், தனியாக சிரித்துக்கொண்டிருந்தார். 15 ஓவர் முடிவில் 170/2 என சிறுத்தையை போல் விரட்டிவந்தது மும்பை அணி.
இம்பாக்ட் வீரர் எல்லீஸ் வீசிய 16வது ஓவரின் முதல் பந்து, இம்பாக்ட் வீரர் சூர்யகுமார் அவுட். அடுத்து களமிறங்கிய டேவிட், ஒரு பவுண்டரி அடித்து ஓவரை முடித்தார். இன்னும் 24 பந்துகளில் 37 ரன்களே தேவை. 17வது ஓவரின் முதல் பந்திலேயே கிஷனின் விக்கெட்டைத் தூக்கினார் அர்ஷ்தீப். 41 பந்துகளில் 75 ரன்கள் எனும் சிறப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்த ஏலத்தில் கிஷனை 25 கோடிக்கு வாங்கிவிடலாம் என முடிவு செய்தது மும்பை நிர்வாகம். அடுத்து களமிறங்கினார் திலக் வர்மா. வான்கடேவில் இரு அணிகளும் மோதியபோது, முதலில் உடைந்த ஸ்டெம்ப், திலக் வர்மா தடுத்து ஆடியதுதான். இம்முறை, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அர்ஷ்தீப்பை வெச்சி செய்தார் திலக். 3 ஒவர்கள் வீசிய 53 ரன்கள் கொடுத்தார் சிறுவர் சிங்.
18 பந்துகளில் 21 ரன்கள் தேவை. சாம் கரணின் 19வது ஓவரில் டேவிட் ஒரு பவுண்டரி தட்ட, 9 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 12 பந்துகளில் 12 ரன்கள் தேவை. அர்ஷ்தீப்பின் 19வது ஓவரில் டேவிட் ஒரு பவுண்டரி அடிக்க, திலக் ஒரு சிக்ஸர் அடித்து மேட்சை முடித்தார். 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை.
சிறப்பாக ஆடிய கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது. களத்தில் வாங்கியது மட்டுமல்லாது, ட்விட்டரிலும் மும்பை இந்தியன்ஸிடம் வாங்கிக் கட்டியது பஞ்சாப் கிங்ஸ்!