கடைசி நேரத்தில் குறுக்கிட்ட மழை.. கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது பஞ்சாப் கிங்ஸ்!
2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பல சுவாரசியம் கலந்த புதிய விதிமுறைகளோடு தொடங்கப்பட்டுள்ள நிலையில், குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியே கடைசிநேர விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியானது ரசிகர்களின் ஆரவாரத்தோடு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பெரிதும் அனுபவம் இல்லாத புதிய வீரர்கள் கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், காயத்தால் ரூல்ட்அவுட்டான கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நிலையில், நிதிஷ் ரானா தலைமையிலான கொல்கத்தா அணியும் களமிறங்கின.
87 ரன்கள் பார்ட்னர்சிப் போட்ட ஷிகர் தவான் & ராஜபக்சே!
டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானா பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது பஞ்சாப் அணி. ஓபனராக களமிறங்கிய பிரப்சிம்ரன் முதல் 2 ஓவர்களிலேயே 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் என அடித்து மிரட்ட, கம்பேக் கொடுத்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி, அற்புதமான குட் லெந்த் பந்தில் முதல் விக்கெட்டாக பிரப்சிம்ரனை வெளியேற்றினார். என்னதான் 2ஆவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்தாலும், பிரப்சிம்ரன் ஏற்படுத்தி கொடுத்த அந்த அதிரடி அணுகுமுறை மாற்றாமல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்தனர் கேப்டன் தவான் மற்றும் பனுகா ராஜபக்சே இருவரும்.
விராட் கோலி சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்!
கொல்கத்தா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிக்சர் பவுண்டரி என விளாசிய ராஜபக்சே, 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பஞ்சாப் அணியை 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் எடுத்துச்சென்ற ராஜபக்சே 11ஆவது ஒவரில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபுறம் 6 பவுண்டரிகளோடு சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 40 ரன்களில் வெளியேறினார். விராட் கோலிக்கு பிறகு 94 முறை ஐபிஎல் போட்டிகளில் 50+ ரன் பார்ட்னர்ஷிப்பில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷிகர் தவான்.
ஷிகர் தவானுக்கு பிறகு அடுத்தடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா, ஷிகந்தர் ராஷா, சாருக் கான் என அனைவரும் அவரவர் பங்கிற்கு சிக்சர் பவுண்டரி என விளாச, 18.50 கோடி என அதிகவிலைக்கு எடுக்கப்பட்ட இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கரன் 2 சிக்சர்களை பறக்கவிட்டு பஞ்சாப் அணியை 191 ரன்களுக்கு எடுத்துச்சென்றார்.
ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய அர்ஸ்தீப் சிங்!
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹமனுல்லா குர்பாஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், 2ஆவது ஓவரை வீச வந்த அர்ஸ்தீப் சிங் ஒரே ஓவரில் மண்டீப் சிங் மற்றும் அனுகுல் ராய் இருவரையும் வெளியேற்றி கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். விக்கெட் சரிவிலிருந்து மீண்டுவருவதற்கு முன்பாக 5ஆவது ஓவரில் அதிரடியாக விளையாடிய குர்பாஷை போல்டாக்கி வெளியேற்றி அடிமேல் அடி கொடுத்தார் நாதன் எலிஸ். பவர்பிளே முடிவதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணியை காப்பாற்றி எடுத்துவருவதற்காக விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் கேப்டன் நிதிஸ் ரானா மற்றும் வெங்கடேஸ் ஐயர் இருவரும்.
அதிரடி காட்டிய ரஸலை வெளியேற்றிய சாம் கரன்!
ரானா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 40+ ரன்கள் பார்டனர்ஷிப் போட்ட இந்த ஜோடியை பிரித்து வைத்தார் ஷிக்கந்தர் ராசா. அடுத்த ஓவரில் ராகு சாஹர் பந்துவீச்சில் ரிங்கு சிங் வெளியேற, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் வெற்றிக்காக போராட ஆரம்பித்தனர். வெங்கடேஷ் ஐயர் ஒருபுறம் சிக்சர்களாக பறக்க விட, மறுபுறம் அதிரடியை காட்ட ஆரம்பித்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை என வானவேடிக்கை காட்ட வெற்றிபெற 5 ஓவர்களில் 55 ரன்கள் என மாறியது.
இந்நிலையில், மீண்டும் பவுலிங் வீச வந்த சாம் கரன் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு எதிராக சிக்சர், பவுண்டரி என விட்டுக்கொடுத்தாலும் 15ஆவது ஓவரில் ரஸ்ஸலை வெளியேற்றி அசத்தினார். அடுத்த ஓவரில் வெங்கடேஷ் ஐயரை அர்ஸ்தீப் சிங் வெளியேற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்கு சாதகமான நிலை ஏற்பட்டது. ஆனால் போட்டியை விட்டுக்கொடுக்க நினைக்காத ஷர்துல் தாகூர் மற்றும் சுனில் நரைன் இருவரும் அடுத்தடுத்து சிக்சர்கள் அடிக்க, 16 ஓவர் முடிவில் 146 ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவை என்ற இடத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது.
7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ்!
மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2023 ஐபில் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி.