நடப்பு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்துள்ளனர். இதில், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள விராட் கோலி, தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க லண்டன் சென்றுள்ளார். இதனால், ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.
இந்த நிலையில், மும்பையில் உள்ள அலிபாக் நகரில் நீண்ட நாட்களாக கட்டிவந்த வீடு நிறைவு பெற்றுள்ளது. அந்த புதிய வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்மூலம், லண்டனுக்கு குடியேற உள்ளார் என்ற வதந்திக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, வணிகத்திலும் கால் பதித்து வருகிறார். அவர் நேரடியாக களமிறங்காமல் தன் உறவினர்கள் மூலம் ஒருசில நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அந்த வகையில் விராட் கோலிக்குச் சொந்தமான ஒன்8 கம்யூன் பப் என்ற நிறுவனம் டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயங்கி வருகிறது. பெங்களூருவில் உள்ள நிறுவனம், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த பப் மீதுதான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விராட் கோலியின் இந்த பப் தவிர, எம்ஜி சாலையில் இயங்கும் வேறு சில பப்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்டதற்காக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளதாகப் பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை இந்த பப்கள் செயல்பட்டதாகவும் இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் இந்த பப்களில் பாடல்கள் போடப்படுவதால் தங்களால் நிம்மதியாகத் தூங்கக்கூட முடிவதில்லை என அப்பகுதி மக்கள் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.