2024 WPL சீசனின் லீக் சுற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. கடந்த ஆண்டைப் போலவே குஜராத் ஜெயின்ட்ஸ் இப்போதும் கடைசி இடம் பிடித்திருக்கிறது. இந்த முறையும் அந்த அணியில் ஆயிரம் குழப்பங்கள் நிலவியிருக்கின்றன. ஒவ்வொரு போட்டிக்கும் புதுப்புது தொடக்க ஜோடிகள், ஓப்பனர்களை மிடில் ஆர்டரில் களமிறக்கியது, மிடில் ஆர்டர் பேட்டர்களை ஓப்பனர்களாக இறக்கியது என அவர்கள் செய்தது ஆயிரம் தவறுகள். இந்த சீசனில் அந்த அணி முக்கிய செயல்பாடுகள் பற்றிய அலசல் இங்கே
போட்டிகள்: 8
வெற்றிகள்: 2
தோல்விகள்: 6
முடிவு இல்லை: 0
புள்ளிகள்: 4
நெட் ரன் ரேட்: -1.158
கடந்த ஆண்டு எப்படி சீசனை முடித்ததோ அங்கிருந்து தான் இந்த சீசனைத் தொடங்கிய ஜெயின்ட்ஸ். முதலிரு போட்டிகளிலும் அந்த அணி 130 ரன்களைக் கூடத் தொடவில்லை. அதே குழப்பங்கள் தொடர, அடுத்த இரு போட்டிகளையும் தோற்றது. முதல் 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் வழக்கம்போல் கடைசி இடத்திலேயே தள்ளாடியது. அதன்பிறகு கேப்டன் பெத் மூனி ஃபார்மை மீட்டெடுக்க, ரன்கள் வரத் தொடங்கியது. எப்படியோ ராயல் சேலஞ்சர்ஸையும், வாரியர்ஸையும் ஒரு முறை வீழ்த்தி 4 புள்ளிகளோடு தொடரை முடித்தது அந்த அணி.
1. பெத் மூனி - 8 போட்டிகளில் 285 ரன்கள்
முதல் 4 போட்டிகளிலும் தொடர்ந்து தடுமாறிய பெத் மூனி, அதன்பிறகு விஸ்வரூபம் எடுத்து தன் சுய ரூபத்தைக் காட்டினார். தொடர்ந்து 3 அரைசதங்கள் விளாசிய அவர், தன் அணியின் அந்த இரு வெற்றிகளுக்கும் முக்கியக் காரணமாக விளங்கினார்.
2. லாரா வோல்வார்ட் - 6 போட்டிகளில் 167 ரன்கள்
பெத் மூனி ஃபார்முக்கு வர, அது லாரா வோல்வார்ட்டுக்கும் பெரிதாக உதவியது. கேப்டனோடு இணைந்து சில நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்த அவர், ஒரு அரைசதமும் அடைத்தார். இவர் 27.83 என்ற சராசரியில் 167 ரன்கள் அடித்ததுதான் இரண்டாவது அதிகபட்சம் என்பது அந்த அணியின் நிலையை சொல்லிவிடும்.
1. தனுஜா கன்வெர் - 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்
இந்த 26 வயது இடது கை ஸ்பின்னர் இந்த சீசன் முழுவதுமே சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார். உபி வாரியர்ஸ்க்கு எதிரான ஒரு போட்டி தவிர்த்து அவர் விளையாடிய 7 போட்டிகளிலுமே விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்ற பௌலர்கள் ரன்களை வாரி வழங்கியபோது 7.13 என்ற எகானமியில் சிறப்பாகப் பந்துவீசினார் கன்வெர்.
2. ஆஷ்லி கார்ட்னர் - 8 போட்டிகளில் 7 விக்கெட்டுகள்
இன்னும் பழைய கார்ட்னரை WPL அரங்கம் பார்க்கவில்லை. 29.71 என்ற சுமாரான சராசரியில் 7 விக்கெட்டுகளே வீழ்த்தியிருக்கிறார். இருந்தாலும் அவர்தான் இரண்டாவது டாப் விக்கெட் டேக்கர்.
தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சீராக செயல்பட்ட தனுஜா கன்வெர்
சொல்லப்போனால் பெத் மூனி, தனுஜா கன்வெர் தவிர்த்து அனைவருமே ஏமாற்றங்கள் பட்டியலில் சேர வேண்டியவர்கள் தான். மிகப் பெரிய ஏமாற்றம் என்றால் ஆஸ்திரேலிய சென்சேஷன் ஃபீபி லிட்ச்ஃபீல்டை சொல்லலாம். 8 போட்டிகளில் 13.5 என்ற சராசரியில் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார் அவர்.
16 வயது வேகப்பந்துவீச்சாளர் ஷப்னம் ஷகில் கடைசி கட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி நம்பிக்கை கொடுத்திருக்கிறார். சமாரி அத்தபத்து, அலீஸா ஹீலி, நேட் சிவர்-பிரன்ட் உள்பட பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நிச்சயம் எதிர்காலத்தில் பெரிய பௌலராக வருவார் என்று அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டிருக்கிறார்.