எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் எனும் நகைச்சுவைக்கு நடமாடும் உதாரணம் ராஜஸ்தான் ராயல்ஸ்தான். தொடரின் துவக்கத்தில் ராயல்ஸ் அடித்த அடியைப் பார்த்து `பட்டப்பகல்ல, நட்ட நட்டு ரோட்டுல, முத்துப்பாண்டியவே அடிக்குறான் யார்றா இவன்' என்றுதான் மற்ற அணி ரசிகர்கள் மிரண்டுபோய் கிடந்தார்கள். இடையில் எந்த கரப்பான்பூச்சி கண் பட்டதோ, ஹல்லா போல் டல்லா போல் ஆனது. ட்ரீம் லெவனில் நம்பிக்கையாக ஒரு அணியை தேர்ந்தெடுக்க சொன்னால், சஞ்சு சாம்சனை சஞ்சு சாம்சனே தேர்ந்தெடுக்கமாட்டார். ஒரு ஆட்டத்தில், `இன்னைக்கு நான் அடிக்குற அடி மரண அடியா இருக்கும்' என சொல்லி அடிக்கிறார். அதை நம்பி அடுத்த ஆட்டத்தில், `இன்னைக்கும் மரண அடியா' எனக் கேட்டால், `உங்க எண்ணம் ராங், உங்க திட்டம் ராங், உங்க ஆசை இல்லை பேராசை ராங், யு ஆர் டோட்டலி ராங்' என ராங் ஷாட் ஆடி அவுட்டாகிவிடுகிறார். போல்ட் அடிக்கடி காயம் என கிளம்பிவிடுகிறார். ஹோல்டருக்கு பவுலிங் மட்டும் கொடுத்து அனுப்பிவிடுகிறார். ரூட்டுக்கு பேட்டிங்கே கொடுக்காமல் துரத்திவிடுகிறார். ரியான் பராக்கை ரீட்டெய்ன் செய்து கதறவிடுகிறார்.
இன்னொரு பக்கம், பஞ்சாப் கிங்ஸ். அணியின் பெயரை மாற்றி, ஜெர்ஸியின் கலரை மாற்றி, கேப்டனை மாற்றி, இந்த சீசனில் ஹோம் கிரவுண்டையே மாற்றிவிட்டார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் மட்டும் மாறாமல் அடம்பிடிக்கிறது. கடந்த மேட்ச் ரஸா நன்றாக ஆடினால், அடுத்த மேட்ச் அவருக்கு பதில் லிவிங்ஸ்டோன் பக்கம் போவது, லிவிங்ஸ்டோன் நன்றாக ஆடினால், மீண்டும் ரஸா பக்கம் வருவது. எல்லீஸிடமிருந்து ரபாடா, ரபாடாவிடமிருந்து எல்லீஸ். அணியில் பாதி பேர் டர்பன் கட்டியிருப்பதால், அடையாளம் தெரியாமல் ஓவரை மாற்றி கொடுப்பது, ஓவரே கொடுக்காமல் இருப்பது என தவனும் ஓவராக சொதப்பிவிட்டார் இம்முறை. சீசனின் தொடக்கத்தில், `குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது' பாடலில் வரும் வண்ணப்பூ வயல்வெளியைப் போல் ஹேர்ஸ்டைல் வைத்திருந்தபோது பஞ்சாப் அணியில் ஆட்டமும் வண்ணமயமாக இருந்தது. எப்போது காயம் காரணமாக விலகியிருந்து மொட்டையுடன் திரும்பி வந்தாரோ, மட்டையடி வாங்கியது பஞ்சாப். இப்படியான இரு அணிகள், தான் ப்ளே ஆஃபுக்குள் நுழைவது தன் கையிலேயே இல்லை எனும் நிலையில், தரம்சாலா மைதானத்தில் தர்மத்துக்கு ஒரு மேட்ச் ஆடின. அதில் அப்படி என்னதான் நடந்ததென பார்ப்போம்.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு கிடுக்குப்பிடி போட்டு பிரம்மாண்ட வெற்றியடைந்த, அடுத்தடுத்த மேட்ச்களில் ராயல் சேலஞ்சர்ஸும், மும்பை இந்தியன்ஸும் தோற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ப்ளே ஆஃபுக்குள் நுழையலாம் என்பதால், டாஸ் வென்ற கேப்டன் சாம்சன், பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். தசைப்பிடிப்பு காரணமாக அணியில் இடம்பெறாத ரவி அஸ்வினுக்கு பதில் நவ்தீப் சைனி களமிறங்கினார்.
ப்ரப்சிம்ரனும் தவனும் பஞ்சாப்பின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் போல்ட். முதல் ஓவரோடு போல்ட் கொண்டிருக்கும் பந்தம். மண்ணோடு மழை கொண்ட சொந்தம். காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் என்பது உண்மைதான். ஓவரின் 2வது பந்திலேயே ப்ரப்சிம்ரனின் விக்கெட்டைத் தூக்கினார் போல்ட். பந்து வீச்சும் அவரே, பந்து கேட்சும் அவரே. 2வது ஓவரை வீசவந்தார் சந்தீப் சர்மா. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் தவன். அதே ஒவரில் சிக்ஸர் ஒன்றையும் பறக்கவிட்டார் மொட்ட பாஸ். ஓவரின் கடைசிப்பந்து டெய்டே ஒரு பவுண்டரி அடித்தார்.
போல்ட்டின் 3வது ஓவரில் டெய்டே ஒரு சிக்ஸர் விளாச, தவன் ஒரு பவுண்டரி அடித்தார். சைனியின் 4வது ஒவரை, தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் டெய்டே. அதே ஒவரின் 4வது பந்து, படிக்கல்லிடம் ஈஸி கேட்ச் கொடுத்து கிளம்பினார் அதர்வா டெய்டே. அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன், ஓவரின் கடைசிப்பந்து ஒரு பவுண்டரியை விராட்டினார். 5வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பொல்ட். ஜாம்பா வீசிய அடுத்த ஓவரில் கேப்டன் தவனும் காலி. பவர்ப்ளே முடிவில் 48/3 என ஆட்டம் பரபரப்பானது.
சைனியின் 7வது ஓவரில், க்ளீன் போல்டானார் லிவிங்ஸ்டோன். ஜாம்பாவின் 8வது ஒவரில் ஆறு ரன்கள் மட்டுமே கிடைத்தது. சஹல் வீசிய 9வது ஓவரில் 3 ரன்கள். சந்தீப் வீசிய அடுத்த ஓவரில், ஜித்தேஷ் சர்மா இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட 10 ஓவர் முடிவில் 78/4 என ஏதோ கொண்டிருந்தது பஞ்சாப் கிங்ஸ். சஹலின் 11வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் சாம் கரண். ஜாம்பா வீசிய அடுத்த ஓவரில், ஜித்தேஷுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. சந்தீப் சர்மாவின் 13வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள். 14வது ஓவரை வீசவந்த சைனி, ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என ஜித்தேஷுக்கு வாரி வழங்கிவிட்டு விக்கெட்டைத் தூக்கினார். 28 பந்துகளில் 44 ரன்கள் அடித்த ஜித்தேஷ், சப்ஸ்டியூட் பெரைராவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்த ஓவரை வீசிய சஹல், 2 ரன்கள் மட்டும் கொடுக்க, 15 ஓவர் முடிவில் 117/5 என சுமாரன நிலையிலிருந்தது பஞ்சாப்.
16வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் கரண். ஜாம்பாவின் அடுத்த ஓவரில், ஷாரூக் கான் ஒரு பவுண்டரி அடித்தார். சைனி வீசிய 18வது ஓவரில் சாம் கரணுக்கு மீண்டுமொரு பவுண்டரி கிட்டியது. சஹலின் 19வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், என ஷாரூக் கானும் இரண்டும் சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என சாம் கரணும் அடித்து வெளுக்க ஒரே ஒவரில் 28 ரன்களை அள்ளினர். அடுத்த ஓவரில் போல்ட்டும் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என வாரி வழங்க 187/5 என எதிர்பாராத ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது பஞ்சாப்.
20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தால் ஆட்டத்தில் ஜெயிக்கலாம். ஆனால், ஆர்.சி.பியை விட ரன்ரேட் அதிகம் பெற 19 ஓவர்களுக்குள் ஆட்டத்தை ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்து, அடுத்த ஆட்டத்தில் ஆர்.சி.பி படுதோல்வி அடைந்தால் ராயல்ஸுக்கு ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு முதலில் இந்த மேட்சை ஜெயிக்க வேண்டும் என யதார்த்தத்தை புரிந்துக்கொண்டு களமிறங்கியது யஷஸ்வி - ஜோஸ் ஜோடி! சாம் கரணிடம் முதல் ஓவரை வீச சொல்லி பந்தை வீசினார் தவன்.
முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரிகள் பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். `குதிரைவால்' படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபைப் பார்த்தது போல், பஞ்சாப் ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரபாடாவின் 2வது ஓவரில், ஜோஸ் பட்லர் எல்.பி.டபிள்யு ஆனார். இப்போது அதே படத்தின் இரண்டாவது ஹாஃபைப் பார்த்தது போல் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அடுத்து களமிறங்கிய படிக்கல், முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்து வெற்றிக்கு அடிக்கல் நாட்டினார்.
அர்ஷ்தீப்பின் 3வது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரி, படிக்கல் ஒரு பவுண்டரி விளாசினர். ரபாடாவின் 4வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் படிக்கல். எல்லீஸின் 5வது ஓவரிலும் ஒரு பவுண்டரி பறந்தது. மீண்டும் ரபாடா வீசிய 6வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என நொறுக்கினார் படிக்கல். பவர்ப்ளேயின் முடிவில் 57/1 என சிறப்பாக தொடங்கியிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ராகுல் சாஹரின் 7வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 4 ரன்கள். இந்த பஞ்சாப் மைதானத்தில் எல்லா ஸ்பின்னர்களும் நொந்து போய் கிடக்க, பாம்பு சாஹர் மட்டும் படமெடுத்து ஆடியது. எல்லீஸின் 8வது ஓவரில் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தார். 9வது ஓவரை வீசிய ராகுல் சாஹர், ஜெய்ஸ்வாலுக்கு ஒரு பவுண்டரி வழங்கினார். அர்ஷ்தீப்பின் அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸர் அடித்த படிக்கல், அடுத்த பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்து, அதற்கடுத்த பந்தில் அவுட்டும் ஆகிவிட்டார். சூப்பரான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 10 ஓவர் முடிவில் 86/2 என ராயல்ஸும் விரட்டி வந்தது.
பாம்பின் விஷத்துக்கு விக்கெட்டைப் பறிகொடுத்தார் கேப்டன் சஞ்சு. இம்முறை ராயல்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடையவே இல்லை. அவர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டது. அடுத்த களமிறங்கிய ஹெட்மயர், அர்ஷ்தீப்பின் அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். ஜெய்ஸ்வாலும் அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். இன்னும் 48 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி. 39 பந்துகளில் அடித்தால் ஆர்.சி.பியை ரன்ரேட்டில் முன்னேறலாம்.
எல்லீஸின் 13வது ஓவரை சிக்ஸருடன் ஆரம்பித்தார் ஹெட்மயர். பவுண்டரியுடன் முடித்தார் ஜெய்ஸ்வால். சாம் கரணின் 14வது ஓவரையும், சிக்ஸருடன் ஆரம்பித்தார் ஹெட்மயர். பவுண்டரியுடன் முடித்தார் அதே ஹெட்மயர். எல்லீஸ் வீசிய அடுத்த ஓவரில், 35 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். என்ன மாயமோ, மந்திரமோ படிக்கல்லைப் போல் இவரும் அதே 50 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இந்த விக்கெட்டில் கூட அசராத ராயல்ஸ் ரசிகர்கள், துருவ் ஜுரேலுக்கு முன்பாகவே ரியான் பராக்கை களமிறக்கியதில் அதிர்ந்துபோனார்கள். இன்னும் 30 பந்துகளில் 47 ரன்கள் தேவை. களத்தில் ரியான் பராக்!
அர்ஷ்தீப்பின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் பராக். சாம் கரணின் 17வது ஓவரை பவுண்டரியுடன் துவங்கினார் ஜெட்மயர். இந்த ஓவரின் 5வது பந்தை, சாம் கரண் பவுன்ஸராக தூக்கிப் போட, அது ஹெட்மயரைக் கடந்து கீப்பரிடம் தஞ்சமடைந்தது. சாம் கரண் உடனே கேட்ச் அப்பீலுக்கு செல்ல, கையைத் தூக்கினார் நடுவர். அடுத்த நொடி, மேல் முறையீட்டுக்குச் சென்றார் ஹெட்மயர். மூன்றாவது நடுவர் மீண்டும் நடந்ததைப் போட்டுப் பார்த்ததில், பேட்டும் பந்தும் உரசவே இல்லை. முடிவை பின் வாங்கினார் நடுவர். இந்த கேப்பில் ஹெட்மயரை அவுட்டாக்கிவிட்டோம் எனும் சந்தோஷத்தில் சாம் கரண் வெற்றிகுறி எல்லாம் செய்து வெறுப்பேற்ற, ஹெட்மயர் பதிலுக்கு வெறுப்பேற்ற தொடங்கினார்.
ரபாடாவின் 18வது ஓவரில், மடார் மடாரென இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் ரியான் பராக். அதற்கு விலையாக அடுத்து மூன்று டாட் பந்துகளை ஆடிவிட்டு, நான்காவது பந்தில் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். சாம் கரண் வீசிய 19வது ஓவரின் முதல் பந்து, ஹெட்மயர் ஒரு பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் இன்னொரு பவுண்டரியும் அடித்து சாம் கரணை ஏகத்துக்கும் வெறுப்பேற்றினார். 5வது பந்தை மீண்டும் பவுண்டரியை நோக்கி பளாரென அடிக்க, பாய்ந்து அற்புதமான கேட்சைப் பிடித்து தொடையைத் தட்டினார் தவன். இன்னும் 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை. பாம்பு வீசிய கடைசி ஓவரில், 4வது பந்தில் ஒருவழியாக ஒரு சிக்ஸரை அடித்து ஆட்டத்தை முடித்தார் ஜுரேல். 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, ராயல்ஸ் அதன் வேலையை செய்துவிட்டது. இனி பெங்களூரும், மும்பையும் தோற்கவேண்டும். அதுவும் பெங்களூர் படுதோல்வி அடையவேண்டும். இது நடந்தால் அது நடக்கும்! 30 பந்துகளில் 51 ரன்கள் விளாசிய படிக்கல்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.