உலகத்திலேயே லக் இல்லாத அணி என்றால் அது பஞ்சாப் கிங்ஸ்தான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆக இருந்த போதும் சரி பஞ்சாப் கிங்ஸ் ஆக இருக்கும்போதும் சரி, வெற்றி தேவதை, பஞ்சாப் அணி ஆடும் போட்டியில் எதிரணி பக்கமே இருப்பாள். வருடத்திற்கு வருடம் கேப்டன்கள் மாறினாலும், கோப்பை தொடும் கனவு மட்டும் மாறிவிடவில்லை. நடப்பு சீசனிலும் இதே பாரம்பரியம் தொட்டு தொடர்ந்து வருகிறது.
இதுவரை 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்று 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் பேட்டிங் யூனிட்டை விட, பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சிறப்பாக செயல்படுகிறது. எந்த ஒரு ஆட்டத்தையும் அவர்கள் எளிதாக விட்டுக்கொடுக்கவில்லை. அனைத்திலும் போராடி போராடியே தோற்றனர். ஆனால் நேற்று நடந்தது கனவா? நிஜமா? என்று பஞ்சாப் அணியின் வீரர்களே தங்களை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில், வலுவாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது பஞ்சாப். கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கினர் கொல்கத்தா அணியின் பிலிப் சால்ட் மற்றும் ‘டேஞ்சரஸ்’ நரைன்.
பஞ்சாப்பை பஞ்சுபஞ்சாக ஆக்கியது சால்ட் & நரைன் கூட்டணி.
முதல் ஓவரை மட்டுமே கொஞ்சம் நிதானமாக ஆடியது கொல்கத்தா. அடுத்தடுத்த ஓவர்களில் ஆக்ஸலேட்டர் ஏறியது. ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. பவர் ப்ளேவில் 76 ரன்களை குவித்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா அணி பவர் ப்ளேவில் எப்போதெல்லாம் ரன்களைக் குவிக்கிறதோ அப்போதெல்லாம் சுனில் நரேனும் ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஆட்டம் கொல்கத்தா அணிக்கு தூணாக இருக்கிறதென சொன்னால் அது மிகையில்லை.
நடப்பு தொடரில் கூட பவர் ப்ளேவில் மட்டும் நரைன் 204 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்த போட்டியிலும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 11 ஆவது ஓவரில்தான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 32 பந்துகளை எதிர்கொண்டு 71 ரன்களைக் குவித்திருந்தார். அதில் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடக்கம்.
நரைன் விக்கெட்டை பறிகொடுத்து முன்னால் போனால், சால்ட்டும் பின்னாலேயே போனார். பஞ்சாப் பந்துவீச்சை விட்டுவிளாசிய அவர் 37 பந்துகளில் 75 ரன்களைக் குவித்தார். இருவரும் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் பஞ்சாப் ரசிகர்கள் சற்றே மூச்சுவிட்டனர். ஆனபோதும் கொல்கத்தா அணிக்கு அமைந்த சின்னசின்ன பார்ட்னர்ஷிப்கள், பஞ்சாப்பை போட்டியில் இருந்து சற்று தள்ளியே வைத்திருந்தது.
வெங்கடேஷ் ஐயர், ரஸல், ஸ்ரேயாஸ் தங்களது பங்கிற்கு அதிரடிகளைக் காட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ரன்களைக் குவித்தது கொல்கத்தா அணி.
இந்த இன்னிங்ஸில் 14 ஓவர்களை வீசிய பஞ்சாப்பின் வேகப்பந்து வீச்சாளர்கள் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தாலும் 205 ரன்களை கொடுத்துள்ளனர். பஞ்சாப்பில் ராகுல் சாஹர் மட்டுமே குறைவான ரன்களை கொடுத்துள்ளார்.
முதல் 7 ஓவர்களில் மட்டும் 3 கேட்ச்களை தவறவிட்டனர். கொல்கத்தா அணி 260 ரன்களை குவித்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
பவர் ப்ளேவில் 93 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி. சம்பவம் செய்த ப்ரம்சிம்ரன் 18 பந்துகளில் அரைசதம் கடந்தாலும், பவர்ப்ளேவின் இறுதிப் பந்தில் ஒரு ரன்னிற்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டையே பறிகொடுத்தார். ஆட்டத்தின் போக்கை இது மாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 7 ஆவது ஓவரில் நரைன் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்தடுத்த சில ஓவர்கள் சற்றே இறுக்கமாகவே அமைந்தன.
ஆனால், மீண்டும் ஆட்டத்திற்கு திரும்பியது பஞ்சாப் அணி. சற்றும் தொய்வில்லாமல் அதை கொண்டு சென்றனர் பேர்ஸ்டோ மற்றும் ரூசோ கூட்டணி. இதனால் பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 132 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இறுதி 4 ஓவர்களில் 52 ரன்கள் தேவை எனும் இலக்கு. களத்தில் இருந்தார் ஷஷாங் சிங். கொல்கத்தாவின் வியூகம் ஏதும் வேலை செய்யவில்லை. அடித்ததெல்லாம் மாபெரும் சிக்ஸர்கள். அடுத்தடுத்த ஓவர்களில் இவர் விட்ட ராக்கெட்டுகள் வங்காள விரிகுடாவில்தான் விழுந்திருக்கும்....!
கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், அந்த அணிக்கு இது இன்னொரு வெற்றி மட்டுமே. ஆனால், பஞ்சாப் படைத்ததென்னவோ வரலாற்று சாதனை.
உலக டி20 வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது பஞ்சாப். பல மாதங்கள் இந்தியாவிலேயே இருந்த பேர்ஸ்டோ இறுதியாக ஃபார்மிற்கு திரும்பி சதமடித்துள்ளார். 8 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களை விளாசிய அவரது ஸ்ட்ரைக் ரேட் 225. இன்னொரு புறம் ஷஷாங் சிங். 28 பந்துகளில் 68 ரன்கள். 8 சிக்ஸர்களை கொளுத்தினார்.
கிட்டத்தட்ட கொல்கத்தாவை மூச்சுவிடக்கூட விடவில்லை ஷஷாங். அம்பயருக்கு சிக்ஸர்களுக்கு கைகளைத் தூக்கி கை வலித்திருக்கும் என்றால், பீல்டர்களுக்கு தலைக்கு மேல் செல்லும் பந்தைப் பார்த்து தலை வலித்திருக்கும். எப்படி போட்டாலும் நொறுக்கும் ஷஷாங் சிங்கைப் பார்த்து தலை வலித்திருக்கும். அந்தளவுக்கு கொல்கத்தாவை சின்னாபின்னமாக்கினார் ஷஷாங். இந்தப் போட்டியில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் அடித்தது மட்டும் 24 சிக்ஸர்கள். கொல்கத்தா அணியோ 18 சிக்ஸர்கள்.
கொல்கத்தா அணியின் நரைன் 4 ஓவர்களில் மொத்தமாகவே 24 ரன்களை மட்டுமே கொடுத்த நிலையில், மற்ற பந்துவீச்சாளர்கள் 14.4 ஓவர்களில் 236 ரன்களைக் கொடுத்துள்ளனர். ஆட்டத்தின் நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.
மறக்கமுடியாத போட்டி. மறக்கமுடியாத நாள்...!