2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2ம் தேதிமுதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வெற்றிக்காக தரமான மோதலை நிகழ்த்திவருகின்றன.
புதிதாக உலகக்கோப்பைக்குள் வந்திருக்கும் அமெரிக்கா, கனடா, நமீபியா, ஓமன் மற்றும் ஜெனிவா முதலிய 5 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகின்றன. விளையாடியிருக்கும் சில போட்டிகளிலேயே ஒரு சூப்பர் ஓவர் போட்டி வந்திருப்பது, நடப்பு உலகக்கோப்பை தொடர் எவ்வளவு கடினமான மோதல்களுடன் இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்நிலையில் 11வது லீக் போட்டியில் அமெரிக்கா அணியை எதிர்த்து தங்களுடைய முதல் போட்டியில் விளையாடுகிறது பாகிஸ்தான் அணி.
டி20 உலகக்கோப்பையில் ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்துவரும் நிலையில், முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
கனடாவை வீழ்த்திய பலத்துடன் களத்திற்கு வந்த அமெரிக்கா அணி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை திணறடித்தது. அமெரிக்கா பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் பேட்டர்கள், ரன் அடிப்பதற்கு தடுமாறியது மட்டுமில்லாமல் தங்களுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.
முகமது ரிஸ்வான் 9 ரன்கள், உஸ்மான் கான் 3 ரன்கள் மற்றும் ஃபகர் சமான் 11 ரன்கள் என அடுத்தடுத்து நடையை கட்ட, 26 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், அணியை மீட்டு எடுத்துவரும் பொறுப்பை பாபர் அசாம், சதாப் கான் இருவரும் எடுத்துக்கொண்டனர்.
ஒருபுறம் பாபர் அசாம் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் 3 சிக்சர்களை பறக்கவிட்ட சதாப் கான் 25 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். சதாப் கான் அதிரடியால் முதல் 6 ஓவரில் 30 ரன்களை எடுத்திருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த 6 ஓவரில் 63 ரன்களை சேர்த்தது. இதேநிலைமை சென்றால் எப்படியும் மிகப்பெரிய டோட்டலை பாகிஸ்தான் எடுத்துவரும் என்ற நிலையில், சதாப் கானை 40 ரன்னில் வெளியேற்றிய நோஸ்துஷ் கென்ஜிகே, அடுத்து வந்த அசாம் கானை 0 ரன்னில் வெளியேற்றி அசத்தினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ பொறுப்பை தனதாக்கி கொண்ட பாபர் அசாம், அதிரடியான பேட்டிங்கிற்கு திரும்பினார். ஆனால் முக்கியமான நேரத்தில் கேப்டன் பாபர் அசாமை 44 ரன்னில் வெளியேற்றிய ஜெஸ்ஸி சிங், மீண்டும் அமெரிக்காவை ஆட்டத்தில் எடுத்துவந்தார். கடைசியாக வந்த ஷாகீன் அப்ரிடி 2 சிக்சர்கள் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்களை எட்டியது பாகிஸ்தான் அணி.
6 ஓவரில் 30 ரன்களை மட்டுமே அடித்த பாகிஸ்தான் அணி, டி20 உலகக்கோப்பையில் தங்களுடைய 5வது மோசமான பவர்பிளேவை பதிவுசெய்தது.
டி20 உலகக்கோப்பையில் குறைந்த பவர்பிளே டோட்டல்:
* 13 vs WI, மிர்பூர், 2014
* 28 vs ZIM, பெர்த், 2022
* 29 vs NAM, அபுதாபி, 2021
* 30 vs NZ, ஷார்ஜா, 2021
* 30 vs USA, டல்லாஸ், 2024*