2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பி பிரிவு போட்டியில் ஓமன் மற்றும் நமீபியா அணிகள் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற நமீபியா கேப்டன் கெரால்ட் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணிக்கு முதல் ஓவரே பேரதிர்ச்சி காத்திருந்தது. டிரம்பில்மேன் வீசிய முதல் பந்தில் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார் கஷ்யப் பிரஜபதி. அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆகிப் இல்யாஸும் அதே முறையில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. தான் வீசிய அடுத்த ஓவரில் மற்றொரு ஓப்பனர் நசீம் குஷி (6 ரன்கள்) விக்கெட்டையும் வெளியேறினார் அவர். இப்படி முதல் 15 பந்துகளிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி நமீபியாவுக்கு அசத்தல் தொடக்கம் கொடுத்தார் டிரம்பில்மேன்.
டாப் ஆர்டர் தடுமாறியிருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். ஜீஷன் மக்சூத் 22 ரன்களும், கலீத் கைல் 34 ரன்களும், அயான் கான் 15 ரன்களும் சேர்த்தனர். அதனால் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை நோக்கிச் சென்றது. இருந்தாலும் டேவிட் வீஸா, டிரம்பில்மேன் ஆகியோர் ஓமனின் லோயர் ஆர்டரை காலி செய்தனர். 19.4 ஓவர்களில் ஓமன் அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிரம்பில்மேன் 4 விக்கெட்டுகளும், வீஸா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய நமீபியாவுக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை. பிலால் கான் பந்துவீச்சில் இரண்டாவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார் மைக்கேல் வேன் லிங்கென். ஆனால் அதன்பிறகு நிகோலஸ் டேவின், யான் ஃபிரைலிங்க் இருவரும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 42 ரன்களாக இருந்தபோது டேவின் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு அந்த அணிக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்த நிலையில், முதல் மூன்று பந்துகளிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் மெரான் கான். அடுத்த 3 பந்துகளில் அந்த அணி ஒருவழியாக 4 ரன்கள் எடுக்க, ஆட்டம் டை ஆனது. அதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவரில் நமீபியாவுக்கு வீஸாவும் எராஸ்மஸும் களமிறங்கினார்கள். பிலால் கான் வீசிய முதல் பந்திலேயே ஃபோர் அடித்து அசத்தினார் வீஸா. அடுத்த பந்தில் சிக்ஸரும் அடித்தார். அடுத்த இரு பந்துகளிலும் அவர்கள் 3 ரன்கள் எடுத்தார். கடைசி இரு பந்துகளிலும் ஸ்டிரைக்கில் இருந்த கேப்டன் எராஸ்மஸ் அந்த 2 பந்துகளிலுமே பௌண்டரிகள் அடித்தார். அதனால் அந்த அணி 21 ரன்கள் விளாசியது.
பேட்டிங்கில் அசத்திய கையோடு பந்தையும் கையில் எடுத்துவந்தார் வீஸா. ஓமன் அணிக்கு ஜீஸன் மக்ஷூத்தும், நசீம் குஷியும் ஆடினார்கள். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த குஷி, அடுத்த பந்தில் டாட் ஆடினார். மூன்றாவது பந்தில் அவர் போல்டாகி அவுட் ஆக, அந்த அணி பெரும் சரிவுக்கு உள்ளானது. அடுத்த 3 பந்துகளிலும் சேர்த்து அந்த அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் நமீபியா இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, சூப்பர் ஓவரில் பேட்டிங், பௌலிங் அனைத்திலும் அசத்திய டேவிட் வீஸா ஆட்ட நாயகன் விருது வென்றார்.