தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள் சேர்த்தனர். நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் டக் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரீ நிரஞ்சன், அஜிதேஷ் குருசாமி 76 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 3 ரன்னிலும், சோனு யாதவ் 20 ரன்னிலும், அருண்குமார் 3 ரன்னிலும் அவுட்டாகினர். அஜிதேஷ் குருசாமி தனி ஆளாகப் போராடி சதமடித்தார்.
கடைசி ஓவரில் நெல்லை வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. குருசாமி 4வது பந்தில் ரன் அவுட் ஆக, கடைசி 2 பந்தில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது களத்திற்கு வந்த பொய்யாமொழி முதல் பந்திலேயே சிக்சர்களுக்கு பந்தை விரட்டினார். இதனையடுத்து, கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் எடுக்க, நெல்லை அணி 6 விக்கெட் இழப்பிற்கு கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த பரபரப்பான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நெல்லை அணியில் குருசாமி அஜிதேஷ் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 112 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.