ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை பரபரப்பாக நடந்து வருகிறது. 14 ஆவது லீக் போட்டியில் குரூப் சி-யில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்களையும், இப்ராஹிம் சாத்ரான் 44 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் போல்ட், மேத் ஹென்றி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. அந்த அணி பேட்ஸ்மேன்களின் ரன்களோ 8,9,5 என செல்போன் இலக்கைப் போல் இருந்தது. 15.2 ஓவர்கள் ஆடிய அந்த அணி 10 விக்கெட்களையும் இழந்து 75 ரன்களை மட்டுமே எடுத்து, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
சிறப்பாக பந்துவீசிய ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றாலும், 3 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 80 ரன்களை விளாசிய குர்பாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஒரு அணியின் கேப்டனாக ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார். அதன்படி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி கேப்டனாக சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார் ரஷித் கான். 2007 ஆம் ஆண்டு நடந்த, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் தனது அணி குறித்து பேசி இருந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான், “எந்த ஒரு ஆடுகளத்திலும் 200க்கும் அதிகமான டார்கெட்டை சேஸ் செய்ய முடியும் என்று கூறும் அளவுக்கான ஒரு பேட்டிங் யூனிட் எங்களுக்கு அமைந்திருக்கிறது. முன்பெல்லாம் நாங்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது டாப் 4 அணிகளுக்குள் இருப்போம் என்று சொல்லும் வகையில் முன்னேறியிருப்பது எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய விஷயம்” என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.