தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, நெல்லை வீரர் ஒருவர் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்தத் தொடரில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், திண்டுக்கல் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் திண்டுக்கல் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 15வது ஓவரில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த நிலையில், பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸை கடந்தார்.
அதை கவனித்த மோகன் பிரசாத், அஸ்வினுக்கு மன்கட் அவுட் அலர்ட் கொடுத்தார். ஆனால் அஸ்வின் வெள்ளைக்கோட்டுக்குள் இருந்ததால், ரன் அவுட் செய்ய முடியாத மோகன், எச்சரிக்கை கொடுத்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “அஸ்வினுக்கேவா” என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
‘மன்கட் அவுட்’ என்றால் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்தான். ஏனெனில், கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடியபோது இதேமுறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார்.
அது கிரிக்கெட் உலகில் விவாதமானது. இருந்தும் அது பவுலர்களின் உரிமை என அப்போது அஸ்வின் தெரிவித்திருந்தார். தற்போது, அவருக்கே மோகன் தண்ணி காட்டியிருப்பதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.