நடப்பு 2024 ஐபிஎல் தொடரில் எப்போதும் இல்லாத வகையில், சொந்த மைதானத்தில் ஒவ்வொரு அணிகளும் வலுவான அணியாக திகழ்ந்துவருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் மற்று ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை தவிர, மீதமிருக்கும் 8 அணிகளும் தங்களுடைய ஹோம் கேம்களில் தோல்வியே பெறாமல் கலக்கி வருகின்றனர்.
அந்தவகையில், முதலிரண்டு போட்டிகளில் சொந்த மண்ணான சென்னை சேப்பாக்கத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக இரண்டு வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
இந்நிலையில், 4வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடவிருக்கிறது. கடந்த போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச டோட்டலான 277 ரன்களை குவித்து மிரட்டியது.
இதற்கிடையில் எதிர்வரும் போட்டிக்கு பாதகமாக அமையும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் வெளியேறியிருப்பதாகவும், அடுத்த இரண்டு போட்டிகளுக்கு விளையடமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, “2024-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக வங்கதேசத்திற்குத் திரும்பியுள்ளார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அதேநேரத்தில் ஏப்ரல் 8ம் தேதியன்று தான் திரும்பிவருவார் என்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சேப்பாக்கம் போட்டியிலும் விளையாட மாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் முஸ்தஃபிசூர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக இருந்து வருகிறார். கடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 300வது டி20 விக்கெட்டை கைப்பற்றிய அவர், டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வங்கதேச வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார்.
முஸ்தஃபிசூர் ரஹ்மான் வெளியேறியிருக்கும் நிலையில், அவருக்கு மாற்றுவீரராக ஃபார்மில் இருந்து வரும் இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்ஷனா இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ரஞ்சிக்கோப்பையில் சிறந்த ஃபார்மில் இருந்துவந்த ஷர்துல் தாக்கூர் மாற்றுவீரராக களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது.