இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இந்த ஆண்டுக்கான 17வது சீசன், கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று (மார்ச் 24) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை அணிக்கு தலைமை தாங்கியிருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தொடக்கம் முதலே அவருக்கு எதிராகச் சத்தமிட்ட ரசிகர்கள், கடைசிவரை அதை நிறுத்தவில்லை. பந்துவீச வந்தபோதும், ஃபீல்டிங் செட் செய்தபோதும் என 12 முறை ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். இதைவிட ஒரு பெரிய சம்பவம் நடைபெற்றது.
இந்தப் போட்டியின்போது மும்பை அணி தரப்பில், 15வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அப்போது மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடியது. அந்த நேரத்தில் அகமதாபாத் மைதானத்தில் அமர்ந்திருந்த கிரிக்கெட் ரசிகர்கள் அந்த நாயைப் பார்த்து ‘ஹர்திக்-ஹர்திக்’ என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவைப் பார்க்கும் பல நெட்டிசன்களும், ‘நாய்கூட பாண்டியாவை மதிக்க மாட்டேங்குது’ என கமெண்ட்களைத் தெரிவித்து வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் ஆரம்பித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் இடையே பெரிய யுத்தமே நடைபெற்றுவருகிறது. காரணம், மும்பை அணியின் கேப்டனாக 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை அணி, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக ரோகித் ஆதரவு வீரர்களும், ரசிகர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடமாட்டார் என்று எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அணிக்காக ஒரு வீரராக ரோகித் சர்மா குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதுடன் 43 ரன்களும் எடுத்தார். ஆனால், புதிய கேப்டனான ஹர்திக்கோ வெறும் 11 ரன்களில் நடையைக் கட்டினார். அத்துடன், முதல் போட்டியிலேயே தோல்வியும் கண்டார்.
இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?