இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இந்த ஆண்டுக்கான 17வது சீசன், கடந்த மார்ச் 22ஆம் தேதி சென்னையில் கோலாகலத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று (மார்ச் 24) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.
எனினும், அன்றைய போட்டியை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்குக் காணவந்த ரசிகர்கள், மும்பை அணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்களோ இல்லையோ, ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். தொடக்கம் முதலே அவருக்கு எதிராகச் சத்தமிட்ட ரசிகர்கள், கடைசிவரை அதை நிறுத்தவில்லை. பந்துவீச வந்தபோதும், ஃபீல்டிங் செட் செய்தபோதும் என 12 முறை ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் மும்பை அணி தரப்பில், 15வது ஓவரை வீசும்போது, மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடிவந்தது. ஹர்திக் பாண்டியா அதனை விரட்டினார். அந்த நாயைப் பார்த்துக்கூட ரசிகர்கள் ‘ஹர்திக்-ஹர்திக்’ என்று கூச்சலிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், ‘நாய்கூட பாண்டியாவை மதிக்க மாட்டேங்குது’ என கமெண்ட்களைத் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். நாய் கூட விஸ்வாசமாக இருக்கும் ஹர்திக்கிற்கு விஸ்வாசம் என்பதே கிடையாது அதனால் நாயுடன் அவரை ஒப்பிடாதீங்க என்னும் அளவிற்கு மிக மோசமாக அவரை சோஷியல் மீடியாவில் விமர்சித்து தள்ளினார்கள்.
இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?
’இந்த அசிங்கம் ஹர்திக் பாண்டியாவிற்குத் தேவையா’ என்பதுதான் பல பேருடைய கேள்வியாக இருக்கிறது. என்றாலும், இந்த விஷயத்தில் ஹர்திக் மீது எந்தத் தவறும் இல்லை என்பதும் உண்மை. ஆம், அவரை நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக்கியது நிர்வாகம் எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ரோகித்தைக் கொஞசம்கூட நிர்வாகம் ஆலோசிக்கவில்லை. அதாவது, அவரைக் கழட்டிவிட்டு அடுத்த கேப்டனைக் கொண்டுவரும் நோக்கிலேயே கவனம் செலுத்தியது. அதனால் வந்த விளைவு, சமீபகாலமாக அந்த அணியையும் ஹர்திக்கையும் பலரும் விமர்சனம் செய்யும் அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுபோல் கேப்டன்ஷிப் அளிக்காத அணியில் இருந்து ரோகித் விலக வேண்டும் எனவும் ஆலோசனைகள் கூறப்பட்டன. ஆனாலும் இதுநாள் வரை இவ்விவகாரம் மிகவும் மவுனமாகவே கடந்தநிலையில், குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலிருந்து பூதாகரமாகவே வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதிலும் சீனியர் வீரரான ரோகித்தை, பவுண்டரி எல்லை அருகே நிறுத்தியதுடன் ‘அங்கே நில்லு.. இங்கே தள்ளி நில்லு’ என மாற்றிமாற்றி ஹர்திக் பாண்டியா சொன்னது, இன்னும் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை வெறுப்படையச் செய்தது. இதனால் மும்பை அணிக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது.
ஏற்கெனவே, ஒரு சாம்பியன் வீரரின் கேப்டன்சி பதவியை இப்படியான முறையில் பறிக்கக்கூடாது என்று அதிருப்தியடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள், மும்பை இந்தியன்ஸ் அணியை UNFOLLOW செய்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் 360 என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்கள் எல்லாம் தங்களது எதிர்ப்பை மறைமுகமாகக் காட்டினர். ஆனாலும், மும்பை அணி நிர்வாகம் இதிலிருந்து பின்வாங்கவில்லை. மொத்தத்தில் தீவிர ஆலோசனை செய்யாமல் மும்பை அணி நிர்வாகம் எடுத்த இந்த திடீர் முடிவால் ரோகித் - ஹர்திக் ஆகியோரின் நல்ல நட்புறவு கெடுவதற்கும் அணி சரிவைச் சந்திப்பதற்கும் முக்கியக் காரணமாகி உள்ளது.
இந்த விஷயத்தில் சென்னை அணியின் கடந்தகால நினைவலைகளைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அதாவது, சென்னை அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 2022ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக்கப்பட்டார். தவிர, தோனியைவிடக் கூடுதல் சம்பளத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், ஜடேஜாவுக்குக் கேப்டன் பதவி வழங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர், அதுநாள் வரை அந்த அணியை வழிநடத்திய தோனிதான். அவருடைய ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், அணி சரிவு கண்டதைத் தொடர்ந்து மீண்டும் சென்னை அணிக்கு தோனி கேப்டனாகி, கடந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் கோப்பையை 5வது முறையாகப் பெற்றுத் தந்தார். தற்போதுகூட, அவரது ஆலோசனையைக் கேட்டபிறகே நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கேப்டன்ஷிப் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துத் தரப்பிடமும் பேசி ஆலோசித்தபிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணியின் பலத்தையும், ரசிகர்களின் ஆதரவையும் சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது.
அதேநேரத்தில், இதற்கு நேர் எதிராக மும்பை அணி நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக்கை, மும்பை அணிக்குள் கொண்டுவந்ததே தவறு எனச் சொல்லப்படும் வேளையில், அவரை மேலும் கேப்டனாக்கியது விமர்சனத்துக்கு வழிவகுத்தது. அதாவது, அவரை கேப்டனாக்கியதில் தவறில்லை. அவரை கேப்டனாக்குவதற்கு முன்பு, இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் பேசப்பட்டிருக்க வேண்டும். அவர் ஆதரவுடன் ஹர்திக் பாண்டியா வழிநடத்தப்பட்டிருந்தால், இந்தப் பிரச்னை நீள்வதற்கு வாய்ப்பிருந்திருக்காது. இல்லையென்றால், நடப்புத் தொடரில் ஆரம்பகட்ட போட்டிகளுக்கு ரோகித் கேப்டனாய் இருந்துவிட்டு (சென்னை அணியைப் போன்று) பிந்தைய போட்டிகளுக்கு ரோகித் மூலமே ஹர்திக்கை கேப்டனாக அறிவித்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் ரோகித் சர்மாவே விலகும்வரை, அணி பொறுமை காத்திருக்கலாம் அல்லது அவரிடம் தீவிர ஆலோசன கேட்டிருக்கலாம்.
இதையும் படிக்க: மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை.. லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை!
இதில் மும்பை அணி நிர்வாகம் கோட்டை விட்டிருப்பதால்தான், ரசிகர்களின் ஆதரவின்றி தற்போது சிக்கித் தருகிறது. முதல் போட்டிக்கே இந்த நிலை என்றால், இன்னும் வரப்போகிற போட்டிகளில் எல்லாம் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் அணி நிர்வாகம் எடுத்த தவறான முடிவால், இன்று அந்த அணியில் கூட்டு முயற்சி இல்லாமல் போவதாக வல்லுநர்கள் கணிக்கிறார்கள். தவிர, இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் ரோகித்தும் ஹர்திக்கும் நிறைய அதிருப்திக்கு ஆளாகப் போகிறார்கள் என்பதே உண்மை.
மைதானம் முழுவதும் நிறைந்திருக்கும் மும்பை அணி ரசிகர்கள் ரோகித்துக்கு ஆதரவாகவும், அதேநேரத்தில் ஹர்திக்கிற்கு எதிராகவும் கூச்சலிடுகின்றனர். இதனால் பாதிப்பு மும்பை அணிக்கே தவிர, ஹர்திக்கிற்கோ அல்லது ரோகித்திற்கோ கிடையாது. காரணம், அவர்கள் இருவரும் இந்த அணி இல்லாவிட்டால், இன்னொரு அணிக்குச் சென்றுவிடுவர். ஆனால், மும்பை அணிக்கு இந்த விஷயத்தால் பலவகையில் இழப்புதான். ஆக, இந்த விஷயத்தில் சென்னை அணியைப் போன்றே மும்பை அணி நிர்வாகமும் விரைந்து வேறு நல்ல முடிவை எடுக்க வேண்டும் பலருடைய வேண்டுகோளாக இருக்கிறது.