இன்னும் இரண்டு தினங்களில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இருக்கிறது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னையும் பெங்களூருவும் சேப்பாக்கம் மைதானத்தில் மல்லுக்கட்ட இருக்கின்றன. அதேநேரத்தில் மும்பை அணி, மார்ச் 24ஆம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது.
மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருடைய தலைமையின் கீழ் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மா விளையாட இருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இது சம்பந்தமான விவகாரமும், சில வீரர்களின் திடீர் ஓய்வுகளும் இன்னும் அவ்வணியில் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் நிலையில், தொடக்கப் போட்டிகளுக்குப் பிறகே அதுகுறித்த விமர்சனங்கள் பெரிதாக வெடிக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும், இன்று பயிற்சி ஆட்டத்தின் போது முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை இன்னாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆரத்தழுவி வரவேற்ற வீடியோ மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது.
இந்த நிலையில், காயம் காரணமாக இலங்கையின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்சான் மதுஷங்கவிற்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் குவேனா மபாகா சேர்க்கப்பட்டிருப்பதாக மும்பை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரை, அடிப்படை விலையாக ரூ.50 லட்சத்துக்கு அணியில் சேர்த்துள்ளது. அவர் அணிக்குள் தேர்வு செய்திருப்பதை மும்பை அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்திலும் உறுதிப்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றிருந்த மபாகா, ஓர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். மணிக்கு 140 கிமீ வேகம் அளவுக்கு பந்துவீசக்கூடிய மபாகா, பயங்கரமான டெத் பந்துகளை வீசக்கூடியவர். தவிர, யார்க்கர் போடுவதிலும் பெயர் பெற்றவர். 17 வயது நிரம்பிய அவர், சமீபத்தில் நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அத்துடன், அந்த அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றவர்களில் அவருக்கும் முக்கியப் பங்குண்டு. அவர், இதுவரை இரண்டு யு19 உலகக்கோப்பைகளில் பங்கேற்றுள்ளார். அந்த இரண்டிலும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
குறிப்பாக, U19 உலகக்கோப்பை வரலாற்றில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்பந்து வீச்சாளர் என்ற பெருமையைச் சமீபத்தில் பெற்றார்.