செய்தியாளர் : சந்தானம்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என தெரிவித்த தோனி காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சை முடிவடைந்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவக்கத்தில் மீண்டும் அந்த இடத்தில் வலி ஏற்பட்டது, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி ஏற்படுவது வழக்கம் என நினைத்த நிலையில், அவருக்கு மீண்டும் அந்த இடத்தில் சிறிய காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் காரணமாகவே அவர் இந்த ஆண்டு பெரும்பாலன போட்டிகளில் 18 ஓவர்களுக்கு பின் மட்டுமே களமிறங்கினார்.
தற்போது பிளே ஆப் சுற்றுக்கு சென்னை முன்னேறவில்லை என்பதால் தோனி ஓய்வை அறிவிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஓய்வு குறித்தான முடிவை ஒருசில மாதங்களில் யோசித்து தெரிவிப்பதாக தோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தோனி 3 மாதங்களில் முடிவு எடுத்து தெரிவிப்பார் எனத் தகவல் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தை பொறுத்தவரை தோனியால் நிச்சயம் தொடர்ந்து விளையாட முடியும் என தாங்கள் நம்புவதாக தெரிவிக்கின்றனர்.
தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் 13 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்துள்ளார். 8 முறை நாட் அவுட் ஆகியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 220.55 ஆகும். ரன் சராசரி 53.67.