ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி பெற்றது.
இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி பேசியிருக்கிறார். அதில் அவர், பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான காரணம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தோனி பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக மிடில் ஓவர்களில் சற்று சொதப்பிவிட்டோம். ராஜஸ்தான் அணியில் அனுபவமிக்க ஸ்பின் பவுலர்கள் பலர் இருப்பதால் அவர்களது ஓவர்களை கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்வதும் அவசியமானது தான்.
இந்தப் போட்டியில் எங்கள் பவுலர்கள் தங்களால் முடிந்தவரை தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தனர். தோல்விக்கு பேட்டிங்கில் சொதப்பியதே காரணமென நான் கருதுகிறேன். ஆடுகளத்தில் பனிப்பொழிவும் இருந்தது
‘கேப்டனாக 200வது போட்டி’ போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சொல்லப்போனால் இது கேப்டனாக 200வது என்பதே எனக்கு தெரியாது. அணிக்கு சிறப்பான முறையில் பங்களிப்பதுதான் முக்கியம்
சிஎஸ்கே கேப்டன் தோனி
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றி இலக்கிற்கு மிக அருகில் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஏனெனில் பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தால் அது நிச்சயம் ரன் ரேட்டை பாதித்திருக்கும். ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் ரன் ரேட் மிக அவசியமானதாக இருக்கும்” என்றார்.