நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. ஐபிஎல் வெற்றிக் கோப்பையை கொடுக்க கேப்டன் தோனியை அழைத்தபோது, அவர் அம்பத்தி ராயுடுவை அழைத்து கோப்பையை கொடுத்த கெளரவப்படுத்தினார்.
நேற்றைய இறுதிப் போட்டிக்கு முந்தைய நாளில்தான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் ஓய்வுப் பெறும் செய்தியை தெரிவித்திருந்தார் அம்பத்தி ராயுடு. அந்த அறிவிப்பில் "மும்பை சிஎஸ்கே என இரண்டு மிகப்பெரிய அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள்,11 பிளே ஆப், 8 இறுதிப் போட்டி, ஐந்து கோப்பை, ஆறாவது கோப்பை இறுதிப் போட்டியில் வெல்வேன் என நம்புகிறேன்.
இது என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். இறுதிப் போட்டியுடன் ஓய்வுப்பெற போகிறேன். இந்த தொடரில் விளையாடியதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி. இந்த ஓய்வு முடிவில் இருந்து திரும்பப் போவதில்லை" என தெரிவித்திருந்தார்.
அவர் சொன்னது போலவே நேற்றைய இறுதிப் போட்டியில் 6ஆம் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டார் ராயுடு. அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான கட்டத்தில் மோகித் சர்மா வீசிய 17 ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றவரும் ராயுடுதான்.
இந்த சீசனில் அவர் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றாலும் இறுதிப் போட்டியில் ராயுடு அடித்த 19 ரன்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார் அம்பத்தி ராயுடு. அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த ராயுடு, தோனியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர்.
மொத்தம் 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,329 ரன்களை அம்பத்தி ராயுடு விளாசி இருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். 22 அரை சதம் அடங்கும். இறுதிப் போட்டியின் வெற்றிக்கு பின்பு பேசிய அம்பத்தி ராயுடு "இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? ஒரு அதிசயமான வெற்றி கிடைத்துள்ளது. இதை என்னால் நம்பமுடியவில்லை" என்றார் நெகிழ்ச்சியாக.
மேலும் பேசிய அவர் "இத்தனை ஆண்டுகள் சிறந்த அணிகளுக்காக விளையாடி இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் இதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பேன். 30 ஆண்டுகளாக அவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறேன். அது வெற்றியுடன் நிறைவுப்பெற்று இருக்கிறது. இந்நேரத்தில் முக்கியமாக என் குடும்பத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மிக முக்கியமாக என் தந்தைக்கு" என உணர்ச்சிப் பொங்க பேசியிருக்கிறார் ராயுடு.