நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 வெற்றி மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 45-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன், சென்னை அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. பிளே ஆஃப் போட்டி நெருங்கி வருவதால், இனி வரும் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் சென்னை அணி விளையாடி வருகிறது.
மேலும், 41 வயதான தோனிக்கு இது கடைசி ஐபிஎல் போட்டி என்று கூறப்பட்டு வருவதால், சேப்பாக்கத்தை தாண்டி வெளி மாநிலங்களில் சென்னை அணி விளையாடும் மைதானங்களில் எல்லாம் சென்னை ரசிகர்கள் குவிந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், சென்னை அணி ஆடும் மைதானங்களில் மஞ்சள் படை அதிகளவில் காணப்படுவது அந்த அணியின் வீரர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது.
இந்தநிலையில், போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனியிடம், வர்ணனையாளர் டேனி மோரிசன், ‘தங்களின் கடைசி ஐபிஎல் சீசனுக்கு, ரசிகர்கள் கொடுக்கும் பிரியாவிடையின் ஆதரவை எந்தளவு அனுபவிக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தோனி, “நீங்கள்தான், இது எனது கடைசி ஐபிஎல் என முடிவு செய்துள்ளீர்கள்” என்று புன்னகையுடன் கூறியுள்ளார். உடனே டேனி மோரிசன், " He is Going to Come Back" என உற்சாகமாகச் சொல்ல, மைதானமே அதிர்ந்தது. இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் #Danny Morrison, #Not Me என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.