இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை அணி பிளே அப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியிருப்பது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அணிக்கு 5 கோப்பைகளைப் பெற்றுத் தந்த தல தோனி, ஏற்கெனவே அணி கேப்டன்ஷிப்பிலிருந்து விலகி, சாதாரண ஒரு வீரராக மட்டுமே விளையாடி வந்தார். அதிலும் அவர், கடைசிக் கட்டத்தில் இறங்கியது விவாதத்தை ஏற்படுத்தியது.
அதற்கு அணி நிர்வாகம், ‘முழங்கால் அறுவைச்சிகிச்சையில் ஏற்பட்ட வலி காரணமாகத்தான் அவ்வாறு இறங்கி விளையாடினார்’ என விளக்கமளித்தது. இந்த நிலையில், தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன. ஆனால், இதுகுறித்த முடிவை விரைவில் அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!
இந்த நிலையில், தாம் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”எக்ஸ்'ஐ விட இன்ஸ்டாகிராமில்தான் எனக்கு விருப்பம் அதிகம். 'எக்ஸ்' தளத்தில் எதுவுமே நல்லது நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன். குறிப்பாக அங்கு சர்ச்சை ஏற்படுத்தப்படுகிறது. யாராவது எதையாவது எழுதி அதை சர்ச்சையாக மாற்றுவார்கள்.
நான் ஏன் அங்கு இருக்க வேண்டும்? அது உங்களுக்குத் தெரியும். எனவே, நான் அங்கு இல்லை. அது எனக்கானது அல்ல. நான் இன்னும் இன்ஸ்டாகிராம் தளத்தை விரும்புகிறேன், ஏனென்றால், நான் ஒரு படம் அல்லது வீடியோவை பகிர்ந்த பிறகு விட்டுவிடுவேன். ஆனால் அதுவும் தற்போது மாறி வருகிறது. இருப்பினும் நான் இன்னும் இன்ஸ்டாகிராமைதான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.