அதிரடிக்கும் சரவெடிக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில், சென்னை அணிக்கு என ரசிகர் கூட்டம் மஞ்சள் படையால் ஆர்ப்பரிப்பதை அனைத்து மைதானங்களிலும் காண முடிகிறது. அதற்குக் காரணம், தல தோனிதான். அவர் களம் இறங்கும்போது ரசிகர்களின் சத்தத்துடன் விசில் சத்தமும் விண்ணைப் பிளக்கிறது. தவிர, செல்போன்கள் மூலம் லைட் அடித்து விண்மீன்களையே வியக்க வைக்கின்றனர். ஆம், கடைசி ஒரு பந்தாக இருந்தாலும், அது அவர் அடிக்கும் சிக்ஸராக இருக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. அதையேதான் அவரும் செய்துவருகிறார். அதேநேரத்தில், பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டியின் கடைசி ஓவரில் ரன் ஓடவேண்டிய வாய்ப்பு கிடைத்தும் ஓடாமல் நின்ற தோனியை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அந்தப் போட்டியின் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட தோனி, பவுண்டரி அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 2வது பந்தில் ரன் எடுக்காத தோனி, 3வது பந்தை பவுண்டரி எல்லைக்கு அருகே அடித்தார். இதையடுத்து, எதிரில் இருந்த டேரில் மிட்செல் ரன்னுக்காக ஓடி வந்தார். ஆனால், தோனி ரன் ஓடாமல் அங்கேயே நின்றுகொண்டார்.
மேலும், டேரில் மிட்செல் எதிர்முனை கிரீசுக்கு சென்ற நிலையில் தோனி, அவரை ‘திரும்பிப் போ’ என கத்தியதால் மீண்டும் மிட்செல் திரும்பி ஓடினார். இதனால் அவர் நூலிழையில் ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பினார். ஒருவேளை தோனி, ஓடியிருந்தால் 2 ரன் கிடைத்திருக்கும். ஆனால், தோனி ஓடாததால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ’மிட்செல்லும் நல்ல பேட்டர்தானே?, அவரையும் விளையாட விட்டிருக்கலாமே’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேநேரத்தில் தோனியின் ரசிகர்களோ, அவரை விட்டுக் கொடுக்காமல், ’தாமே கடைசி ஓவர் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும். சிக்ஸர் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்த வேண்டும்’ என்ற நோக்கத்தில்தான் டோனி அப்படிச் செய்தார் எனக் கூறு மழுப்புகின்றனர். பின்னர் தோனியால் ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஆயினும், தோனி ரன் ஓடாதது குறித்து கிரிக்கெட் வல்லுநர்களும் விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பும் இதேபோல் தோனி இர்பார் பதான் ரன் அவுட் ஆக்கிய போட்டியின் வீடியோவையும் சிலர் வைரல் ஆக பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 127 வருட சாம்ராஜ்ஜியம்.. 2 ஆக உடைந்த godrej நிறுவனம்.. பிரிக்கப்பட்ட பங்குகள்!