ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருபவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த அடையாளம் தெரியாத டிரைவர் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டதாகவும். அவர் அணியின் உள் ரகசியங்களை சொன்னால், தனக்கு ஒரு பெரிய தொகை தருவதாக கூறியதாகவும் முகமது சிராஜ் பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு (ஏசியு) புகார் தெரிவித்தார்.
முகமது சிராஜின் புகாரின்பேரில் சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்த டிரைவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிராஜை தொடர்பு கொண்டவர் புக்கி அல்ல என்றும், ஹைதராபாத்தை சேர்ந்த டிரைவர் என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிராஜை தொடர்பு கொண்டவர் எந்த புக்கியும் இல்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநரான இவர், போட்டிகளில் பந்தயம் கட்டுகிறார். அவர் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்தார். இதன் காரணமாக அவர் அணியைப் பற்றிய உள் தகவல்களுக்கு சிராஜை தொடர்பு கொண்டார். இதுகுறித்து உடனடியாக சிராஜ் எங்களுக்கு தகவல் தெரிவித்தார்'' என்றார்.