MI vs சூப்பர் கிங்ஸ். அமெரிக்காவில் கிளாசிகோ ரெடி. சியாட்டிலோடு பைனலில் மோதப்போவது யார்?

சேன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் கடைசி இரு இடங்கள் பிடித்து வெளியேறின.
#TSKvMINY
#TSKvMINYtwitter
Published on

மேஜர் லீக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்திருக்கிறது சியாட்டில் ஆர்காஸ். குவாலிஃபயர் போட்டியில் அந்த அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. இதன்மூலம் இரண்டாவது பைனலிஸ்ட்டை முடிவு செய்யும் சேலஞ்சர் போட்டியில் MI நியூ யார்க் அணியை சந்திக்கிறது சூப்பர் கிங்ஸ். ஆக, அமெரிக்காவில் ஒரு MI vs சூப்பர் கிங்ஸ் யுத்தம் அரங்கேறப்போகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் டி10, டி20 கிரிக்கெட் லீகுகள் நடப்பதுபோல் அமெரிக்காவிலும் ஒரு பிரபலமான தொடரை நடத்தும் முயற்சி தொடங்கப்பட்டது. அதன் பலனாக 6 அணிகள் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடர் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் சீசன் ஜூலை 13 தொடங்கியது. லீக் சுற்றின் முடிவில் சியாட்டில் ஓர்காஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம், MI நியூ யார்க் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. சேன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் கடைசி இரு இடங்கள் பிடித்து வெளியேறின.

பிளே ஆஃப் போட்டிகள் இந்திய நேரப்படி வெள்ளிக் கிழமை அதிகாலை நடந்தன. முதலில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்கொண்டது MI நியூ யார்க். கடைசி லீக் போட்டியில் கேப்டன் பொல்லார்ட் காயமடைந்திருந்ததால் நிகோலஸ் பூரண் கேப்டனாக செயல்பட்டார். ரஷீத் கான் அணியில் இருந்தாலும், அவர் SA20 தொடரில் MI அணியின் கேப்டனாக இருந்தபோது அந்த அணி சிறப்பாக செயல்படாததால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 கேப்டன் பூரண் நியூ யார்க் அணிக்கு தலைமை தாங்கினார்.

எலிமினேட்டரில், டாஸ் வென்ற வாஷிங்டன் ஃப்ரீடம் கேப்டன் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூ யார்க் அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 41 ரன்களுக்கு மூன்றாவது விக்கெட்டுக்கு அந்த அணி இழந்தபோது 9.2 ஓவர்கள் கடந்திருந்தது. அவ்வளவு மெதுவாகத்தான் ஆட்டத்தைத் தொடங்கியது அந்த அணி. கடைசி 2 போட்டிகளிலும் அரை சதம் அடித்திருந்த பூரண் 10 பந்துகளில் ஒரேயொரு ரன் எடுத்து வெளியேறியிருந்தார். ஆனால், பொல்லார்டுக்குப் பின் களமிறங்கிய இளம் வீரர் டிவால்ட் பிரெவிஸ் அணியின் நிலையை மாற்றினார். 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் அவர். அதிரடி வீரர் டிம் டேவிட் 12 பந்துகளில் 23 ரன்கள் விளாச, அந்த அணி 141 ரன்கள் என டீசன்ட்டான ஸ்கோரை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. மூன்றாவது ஓவரிலேயே மேத்யூ ஷார்ட்டை வெளியேற்றினார் டிரென்ட் போல்ட். ஆண்ட்ரே காஸ், முக்தார் அஹமது இருவரும் நிதானமான ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அதன்பிறகு MI நியூ யார்க் பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினார். குறிப்பாக டிரென்ட் போல்ட் அந்த அணியின் லோயர் மிடில் ஆர்டரை காலி செய்தார். இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூ யார்க். போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்தத் தொடரில் 6 போட்டிகளில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் விக்கெட் டேக்கராக விளங்குகிறார் அவர்.

அதற்கடுத்து நடந்த குவாலிஃபயர் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி டேபிள் டாப்பர் சியாட்டில் ஓர்காஸை சந்தித்தது. டாஸ் வென்ற டெக்சாஸ் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸி பேட்டிங் தேர்வு செய்தார். இந்தத் தொடரில் தொடர்ந்து தடுமாறிவரும் அவர், ஐந்தே ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது டெக்சாஸ். டேனியல் சாம்ஸ் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளும், இமாத் வசீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சியாட்டில் மிக எளிதாக அந்த இலக்கை சேஸ் செய்தது. குவின்டன் டி காக் 50 பந்துகளில் 88 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார். 5 ஓவர்கள் மீதம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்று பைனலுக்குள் காலெடுத்து வைத்தது சியாட்டில்.

குவாலிஃபயரில் தோற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், எலிமினேட்டரில் வென்ற MI நியூ யார்க் அணியை சேலஞ்சர் போட்டியில் சந்திக்கப்போகிறது. இந்தப் போட்டியை வெல்லும் அணி இறுதிப் போட்டியில் சியாட்டிலுடன் மோதும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com