“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
வாழ்க்கை ஓடி ஓடி அலைஞ்சு திரிஞ்சு உடைஞ்சு முடிஞ்சு ஆரம்பிச்ச இடத்தை தேடி வந்து நிற்கும் என்பதுபோல, ஐ.பி.எல்லும் அப்படியே வந்து நிற்கிறது. இந்நிலையில் மிக முக்கியமான போட்டியாக, மும்பை மாநகரிலே வான்கடே மைதானத்திலே மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மாம்பழம் வேண்டி மாமரம் ஏறினர். டாஸ் வென்ற அகில உலக கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். மாம்பழ கலர் அணியை போன சீசனில் காவு வாங்கிய, க்றிஸ் ஜோர்டன் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கினார். ஆட்டம் தொடங்கியது!
கோலியும், டூப்ளெஸ்ஸிஸும் ஆர்.சி.பியின் இன்னிங்ஸை துவங்க, முதல் ஓவரை வீசினார் பெஹ்ரன்டார்ஃப். ஓவரின் 4வது பந்து, டூப்ளெஸ்ஸிஸ் கொடுத்த ஈஸி கேட்சை, கோட்டைவிட்டார் வதேரா. நொந்துபோனார் ரோகித். ஆனால், அடுத்த பந்தே விக்கெட் விழுந்தது. அதுவும் விராட் கோலியின் விக்கெட். கோலி இறங்கி வந்து ஆட, பந்து பேட்டை உரசிவிட்டு கீப்பரிடம் கேட்சானது. ரோகித் மேல் முறையீட்டுக்கு செல்ல, சாட்சிகளும் ஆவணங்களும் ரோகித்துக்கு சாதகமாய் இருக்க, டிரெஸ்ஸிங் ரூமிற்கு கிளம்பினார் கோலி. ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக், மாம்பழம் சாப்பிட்டுக்கொண்டே மேட்சை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
2வது ஓவரிலேயே வந்துவிட்டார் சாவ்லா. பொளேரென இரண்டு பவுண்டரிகளை அடித்து விரட்டினார் டூப்ளெஸ்ஸிஸ். பெஹ்ரன்டார்ஃபின் 3வது ஓவரை, பவுண்டரியுடன் ஆரம்பித்த ராவத், அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். இந்த சீசனில், ஆர்.சி.பிக்காக ஒன் டவுன் இறங்கிய எவரும் பத்து ரன்களை தாண்டவில்லை. `யாரோ முட்டை மந்திரம் போட்டிருக்கிறார்கள். டி.கே எவ்வளவு வலு போட்டு அடித்தாலும் பந்து எல்லைக் கோட்டை தாண்டமாட்டுது' என வருத்தம் கொண்டார் அப்பாவி தினேஷ் கார்த்திக் ரசிகர்.
அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல், ஒரு பவுண்டரியை விளாசினார். க்ரீனின் 4வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் டூப்ளெஸ்ஸிஸ். பெஹ்ரன்டார்ஃப் வீசிய 5வது ஓவரில், மேக்ஸ்வெல் இரண்டு பவுண்டரியும், டூப்ளெஸ்ஸி ஒரு சிக்ஸரும் அடித்தனர். சாவ்லாவின் 6வது ஒவரை, இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் மேக்ஸி. பவர்ப்ளேயின் முடிவில் 56/2 என நல்ல ஸ்கோருடன் துவங்கியிருந்தது பெங்களூர்.
ஜோர்டனின் 7வது ஓவரில், இரண்டு சிக்ஸர்களை பொளந்தார் மேக்ஸி. சாவ்லாவின் அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸர் சிறகடித்து பறந்தது. 9வது ஓவரில், 6 ரன்கள் மட்டும் கொடுத்தார் கார்த்திகேயா. மத்வாலின் 10வது ஓவரை, பவுண்டரியுடன் தொடங்கிய மேக்ஸி, அடுத்த பந்தில் ஒரு சிங்கிளைத் தட்டி தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அதே ஓவரில், ஒரு ஃப்ரீஹிட் கிடைக்க சிக்ஸரை தூக்கி சாத்தினார் டூப்ளெஸ்ஸிஸ். 10 ஓவர் முடிவில் 104/2 கெத்தாக ஆடிக்கொண்டிருந்தது ஆர்.சி.பி.
மீண்டும் 11வது ஓவரில் வந்து ஜோர்டன் மாங்காய் அடிக்க, டூப்ளெஸ்ஸிஸ் ஒரு பவுண்டரி அடித்து, தனது மற்றொரு அரைசதத்தையும் பதிவு செய்தார். அதே ஓவரில், மேக்ஸ்வெல் ரிவர்ஸ் ரேம்ப்பில் ஒரு சிக்ஸரை தள்ளிவிட்டார். வித்தியாசமான ஷாட்! மீண்டும் வந்தா சாவ்லாவை, மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார் டூப்ளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி அடித்தார். பெஹ்ரன்டார்ஃபின் 13வது ஒவரில், ஒரு பவுண்டரியைத் தட்டிய மேக்ஸி, அடுத்த பந்திலேயே வதேராவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். 33 பந்துகளில் 68 ரன்கள் எனும் அதிரடி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 14வது ஓவரில், கார்த்திகேயனுக்கு மாம்பழம் கிடைத்துவிட்டது. கடந்த மேட்சில் அரைசதம் அடித்திருந்த லோம்ரோரின் விக்கெட்டை தூக்கினார்.
ஆர்.சி.பிக்கு ஃபினிஷ் செய்ய சொன்னால், ஆர்.சி.பியை ஃபினிஷ் செய்துகொண்டிருக்கும் டி.கே. களமிறங்கினார். 15வது ஓவரின் முதல் பந்து, கேப்டன் டூப்ளெஸ்ஸியின் விக்கெட்டைக் கழட்டினார் க்ரீன். தட்டி தடுமாறி கேட்ச் பிடித்தார் சப்ஸ்டிட்யூட் வீரர் விஷ்ணு வினோத். 41 பந்துகளில் 65 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. லோம்ரோருக்கு பதில் கேதர் ஜாதவை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது ஆர்.சி.பி. வந்ததும் ஃபீல்டர்களை எண்ணிய கேதர் ஜாதவ், முதல் பந்தே பவுண்டரி விளாசினார். 15 ஓவரில் 152/5 என அதிரடி காட்ட வேண்டிய நிலையிலிருந்தது ஆர்.சி.பி.
கார்த்திகேயாவின் 16வது ஒவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கார்த்திக். அப்படியும் அந்த ஓவரில், 9 ரன்கள் மட்டுமே. ஜோர்டனின் 17வது ஓவரில், மீண்டுமொரு பவுண்டரி அடித்தார் கார்த்திக். 18வது ஓவரை மீண்டும் கார்த்திகேயா வீச, இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் டி.கே! ஆர்.சி.பி ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்விட்டார்கள். அடுத்து ஒரு சிக்ஸரும் விளாச, பொளபொளவென கண்ணீர் கொட்டியது. ஜோர்டன் வீசிய 19வது ஓவரில், டி.கேவின் விக்கெட் காலி. அடுத்து களமிறங்கிய ஹசரங்கா, அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். ஆகாஷ் மத்வாலின் கடைசி ஓவரில், 6 ரன்கள் மட்டுமே கிடைக்க 199/6 என இன்னிங்ஸை முடித்தது ஆர்.சி.பி! `இது எங்க ரோகித்துக்கே பத்தாதேடா' எனும் பழைய பன்ச் வசனம் தொண்டைக்குழியில் வந்து நிற்க, வாயை மூடிக்கொண்டார்கள் ரோகித் ரசிகர்கள்.
200 எனும் ஸ்கோரை எட்டிப்பிடிக்க, கிஷன் - ரோகித் ஜோடி களமிறங்கியது. ஆக்ரோஷ பவுலர் சிராஜ், முதல் ஓவரை வீசவந்தார். முதல் பந்தே பவுண்டரிக்கு விளாசினார் கிஷன். `என்ன ஸ்டார்ட்' என பல்தான்கள் பெருமிதம் கொள்ள, அடுத்த ஐந்து பந்துகளிலும் புள்ளி வைத்தார் கிஷன். ஹேசல்வுட்டின் 2வது ஓவரின் முதல் பந்து, பவுண்டரி தட்டினார் ரோகித். இன்று புது விருந்தாளி வருவான் என எதிர்பார்த்திருந்த ரோகித்தின் வாத்துகள், வெறுப்பாகின. அதே ஓவரில், இரண்டு டயனமைட் குண்டுகளை பாக்கெட்டிலிருந்து பவுண்டரியில் தூக்கி எறிந்தார் கிஷன்.
சிராஜின் 3வது ஓவரில், தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் இஷான். நவீன் உல் ஹக், அடுத்த மாம்பழத்தை கட் செய்தார். ஹேசல்வுட்டின் 4வது ஓவரையும் சிக்ஸருடன் துவங்கினார் கிஷன். ஹசரங்காவின் 5வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசிய இஷான் கிஷன், 4வது பந்தில் கீப்பர் ராவத்திடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். 21 பந்துகளில் 42 ரன்கள் எனும் அதிரடி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதே ஓவரின் கடைசிப்பந்தில், ரோகித்தும் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்! மேல்முறையீட்டுக்கு சென்று அவுட் வாங்கினார் டூப்ளெஸ்ஸிஸ். வைசாக் விஜயகுமாரின் 6வது ஓவரில், வதேரா ஒரு சிக்ஸரை விளாச 62/2 என விரட்டிவந்தது மும்பை.
ஹர்ஷலின் 7வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார் ஸ்கை. அதே ஓவரில் வதேராவும் ஒரு பவுண்டரி அடித்தார். விஜயகுமாரின் 8வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் சூர்யகுமார். ஹசரங்காவின் 9வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே. ஹர்ஷலின் 10வது ஓவரில், மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தார் வதேரா. 10 ஓவர் முடிவில் 99/2 என்ற நிலையிலிருந்து மும்பை. இது வெறும் ஆரம்பம்தான். இனிமேல்தான் பூகம்பம்! இன்னும் 60 பந்துகளில் 101 ரன்கள் தேவை.
ஹசரங்காவின் 11வது ஓவரில், சூர்யகுமார் ஒரு சிக்ஸர், வதேரா ஒரு சிக்ஸர் என பொளந்தனர். ஹேசல்வுட்டின் 12வது ஓவரில், சூர்யகுமார் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். மீண்டும் வந்தார் ஹர்ஷல். நோ பாலில் ஒரு பவுண்டரி, ஃப்ரீஹிட்டில் ஒரு பவுண்டரி, பிறகு சும்மாவே ஒரு பவுண்டரி என ஜூஸ் பிழிந்தது மும்பை. சிராஜின் 14வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர், ஒரு டபுள்ஸ் அடித்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார் சூர்யகுமார் யாதவ். ஹசரங்காவின் 15வது ஓவரில், ஸ்கை இரண்டு சிக்ஸர்களும், வதேரா ஒரு பவுண்டரியும் வெளுத்தனர். 30 பந்துகளில் 26 ரன்கள் தேவை என நிலைமை தலைகீழானது.
விஜயகுமாரின் 16வது ஓவரில், நோ பாலில் ஒரு சிக்ஸர், ஃப்ரீஹிட்டில் ஒரு பவுண்டரி, அடுத்த பந்தில் ஒரு சிக்ஸர் என மாம்பழத்தின் கொட்டையை பிதுக்கிய ஸ்கை, அடுத்த பந்திலேயே வண்டு கடித்து அவுட்டானார். 35 பந்துகளில் 83 ரன்கள் எனும் அதி அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து டேவிட் வந்தார், முதல் பந்தை தூக்கி அடித்தார், கேட்சாகி திரும்பிச் சென்றார். 24 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே தேவை. மீண்டும் ஹர்ஷல் படேலே கிளம்பி வர, ஒரு சிக்ஸர் அடித்து அரை சதத்தையும் நிறைவு செய்தார், அணியையும் ஜெயிக்க வைத்தார் வதேரா. 200 ரன்களை 16.3 ஓவர்களிலேயே சேஸ் செய்து மாஸ் காட்டியது மும்பை. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்று, புள்ளிப்பட்டியலில் மூண்றாவது இடத்துக்கு தாவி குதித்தது ரோகித் & கோ. எந்த காலமானாலும் அது மும்பை இந்தியன்ஸ் காலம் என பாடத் துவங்கினார்கள் பல்தான்கள். 360 டிகிரி சூர்யகுமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மாம்பழம் வெட்டிய கத்தியை கழுவி வைத்துவிட்டு உறங்கச்சென்றார் நவீன் உல் ஹக். அடுத்து லக்னோ ஆடும் போட்டியில், கோலியும் சிராஜும் சேர்ந்து `பிதாமகன்' சூர்யா, விக்ரம் போல் பலாப்பழம் உரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.