2024 ஐபிஎல் தொடரானது பாதிகடலை தாண்டி பரபரப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக போராடி வருகின்றன. எப்போதும் முதல் பாதியைவிட இரண்டாவது பாதியில் பல அணிகள் கம்பேக் கொடுத்து, தங்களுடைய பிளே ஆஃப் வாய்ப்புக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படும்.
அந்தவகையில் முதல் 5 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி, அடுத்த 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று தங்களுடைய அரையிறுதி வாய்ப்புக்காக போராடிவருகிறது. அணிக்குள் வந்திருக்கும் ஃப்ரேசர், ஸ்டப்ஸ் போன்ற புதிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தொடங்கியிருக்கும் நிலையில், அந்த அணியின் பேட்டிங் சரியான பாதைக்கு திரும்பியுள்ளது.
ஆனால் அவர்களின் முக்கிய வீரராக இருந்த ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரரான மிட்செல் மார்ஸ் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் கிடைக்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஆல்ரவுண்டர் வீரராக டெல்லி அணியின் ஸ்டார் வீரராக பார்க்கப்பட்ட மிட்செல், திடீரென தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு சென்றிருப்பது அந்த அணிக்கு பெரிய அடியாக விழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே டெல்லி அணிக்காக விளையாடிய மிட்செல் மார்ஸ், ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு அதிரடியான கேமியா ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வலது தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மிட்செல் மார்ஸ் போட்டியில் பங்கேற்காமல் இருந்துவந்தார்.
வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முக்கியமான வீரர் என்பதால், அவரின் சேவைக்காக ஆஸ்திரேலியா நிர்வாகம் அவரை ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப அழைத்து தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துவருகிறது.
இந்நிலையில் மிட்செல் மார்ஸின் கம்பேக் குறித்து பேசிய டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “மிட்செல் மார்ஸ் ஐபிஎல் தொடருக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரர்களுடன் செல்லவேண்டிய இடத்தில் அணி இருக்கிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவரை டி20 உலகக்கோப்பைக்குள் மீட்கும் நடவடிக்கையில் ஆர்வமாக இருந்ததால், நாங்கள் அவரை முடிந்தவரையில் விரைவாக அனுப்பியுள்ளோம். டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தயாராக இருப்பார் என்று நினைக்கிறேன்” என பாண்டிங் கூறியுள்ளார்.