2024 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுபோட்டிகள் பரபரப்பாக நடந்துவருகின்றன. சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடும் நிலையில், ஆஸ்திரேலியா அணி வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில், இன்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. சாம்பியன் அணியான ஆஸ்திரேலியா அணியை முதல் முறையாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் சூப்பர் 8-ன் கடைசி போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடவிருக்கும் ஆஸ்திரேலியா அணி கட்டாயம் வெற்றிபெறவேண்டிய நிலையில் உள்ளது. ஒருவேளை இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா தோற்றால் 2021 டி20 உலகக்கோப்பை வென்ற அணியான ஆஸ்திரேலியா நிச்சயம் நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறும்.
இந்த சூழலில்தான் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் வகையில் ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஸ் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியா வீரர்கள் மைண்ட் கேம் விளையாடுவதில் வல்லவர்கள் என்றாலும், அவர்கள் நாக்அவுட் போட்டிகளில் எப்போதும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள்.
அந்தவகையில் இந்திய அணி உடனான போட்டி குறித்து பேசிய அவர், “நாங்கள் அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்லவேண்டும், அதற்கு இந்தியாவை போன்ற ஒரு சிறந்த அணி எங்களுக்கு இருக்கமுடியாது. ஆப்கானிஸ்தான் அணி எங்களிடமிருந்து எல்லாவகையிலும் போட்டியை எடுத்துச்சென்றுவிட்டனர். நிச்சயம் நாங்கள் அடுத்த போட்டியில் பலமுடன் திரும்ப வருவோம்” என்று பேசினார்.
முன்னதாக, “நாங்கள் டாஸ்ஸால் தோற்கவில்லை, ஏனென்றால் நிறைய அணிகள் ஆடுகளம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள முதலில் பந்துவீசுகின்றன. நாங்கள் ஃபீல்டிங்கில்தான் கோட்டைவிட்டுவிட்டோம், மற்றபடி எங்களுடைய ஆட்டம் சிறப்பாகவே இருந்தது” என்று போட்டிக்கு பிறகான பேட்டியில் கூறியிருந்தார் அவர்.