2024 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் முதல்முதலாக பங்கேற்று மிகப்பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக, அனைத்து அணிகளும் தங்களுடைய அணித்தேர்வை வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில் டி20 உலகக்கோப்பைக்கு செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அதில் ”ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்டியா (து.கே), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்” முதலிய 15 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய அணிகள் தங்களுடைய ஸ்குவாடை அறிவித்துள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் 2024 டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லக்கூடிய 4 அணிகளை கணித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மைக்கேல் வாகன், ’2024 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் என்னுடைய 4 அணிகள் “இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய பதிவில் பதிவிட்டுவரும் இந்திய ரசிகர்கள், “நீங்க இந்தியாவ மென்சன் பண்ணாதான், அரையிறுதிக்கு போகாது. இப்போது எங்கள் அணி நிச்சயம் செமிபைனல் சென்றுவிடும்” என்றும், “ஒரே க்ரூப்ல இருக்க 3 அணி எல்லாமே எப்படி அரையிறுதிக்கு முன்னேறும்” என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.