2024 ஐபிஎல் தொடரானது பல்வேறு புதிய மாற்றங்களுடன் பரபரப்பாக தொடங்கவிருக்கிறது. 2024 ஐபிஎல் டிரேடிங்கின் போதே ”ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டது” பரபரப்பான சூழலை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு பிறகு ”ரோகித் சர்மா மும்பை கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், 20 கோடிக்கு மேல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் ஏலம், சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன், ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கு கம்பேக் கொடுத்தது” என்று பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் பட்டியல் நீண்டுக்கொண்டே போனது.
இதற்கிடையில் ”புதிய ஐபிஎல் சீசனில், புதிய ரோல்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தோனி குறிப்பிட்டதை போன்றே கேப்டன்சி பதவியிலிருந்து விலகி, வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடவிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், தோனி கேப்டனாக இல்லாததே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20% மோசமானதாக மாற்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் வாகன், “எம் எஸ் தோனி கேப்டனாக இல்லை என்பது, வரும் 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20% மோசமானதாக மாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மைக்கேல் வாகனின் கருத்திற்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், சில ரசிகர்கள் அவருடைய கருத்து சரி தான் என்று கருத்திட்டு வருகின்றனர். கடந்த 2022 ஐபிஎல் தொடரில் இதுதான் நடந்தது என்று பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் ஒரு ரசிகர், “2022 ஐபிஎல் தொடரிலும் தோனி இதேபோன்று தான் கேப்டன்சியை ஜடேஜாவிடன் ஒப்படைத்தார். அப்போது தோனி இல்லாமல் அணியின் செயல்பாடு ஏமாற்றம் அளித்தது, அதனால் தோனி கேப்டன் பதவியை திரும்பப் பெருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த சீசனில் CSK ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாமல் 9வது இடத்தில் சீசனை முடித்தது.
அந்த சீசனின் பாதியில் தோனி கேப்டன் பதவிக்கு திரும்பிய போதும் கூட, CSK அணிக்கு எதுவும் சரியாக சென்று சேரவில்லை. இதற்கிடையில் 2024 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாதோ என்று நினைக்கிறேன்” என கருத்திட்டுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி எடுத்த முடிவு இது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கேப்டன்சி குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அதில் ருத்துராஜ் சிறப்பாக செயல்பட்டார். புதிய கேப்டன் நியமனம் செய்ய இதுவே சரியான நேரம் என தோனி கருதியதின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜடேஜா-வை கேப்டனாக நியமனம் செய்ததில் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் தற்போது கற்றுள்ளோம். எனவே கடந்த முறை இல்லாத வகையில் அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கிறோம். ஜடேஜா முழுமையாக ருத்துராஜ் கெய்க்வாட் பக்கம் உள்ளார். அணியின் கேப்டனாக முடிவுகளை ருத்ராஜ் எடுப்பார். இருந்தாலும் நிச்சயம் அவர் தோனி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களின் அலோசனையை மைதானத்தில் பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.